செங்கல்பட்டு மாவட்டம் குடிப்பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள ருத்ரேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது திங்கட்கிழமை அன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று இந்த கோவிலில் சிறப்பாக இந்த சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி இன்று காலையே கோவில் அலங்கார மண்டபத்தில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைக்கப்பட்டது. மேலும் அனைத்து சங்குகளும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகளும் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க சங்குகளில் உள்ள புனித நீர் சுவாமிக்கு ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்வு என்பதால் இந்த பூஜையில் அப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்....