கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி, எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அரசு முறைப் பயணமாகச் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங்கை தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் வர்த்தக ரீதியான அழுத்தங்களைக் கொடுத்து வரும் சூழலில், விவசாயம், எரிசக்தி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சாராத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகச் சீன நிறுவனங்களின் தலைவர்களையும் கார்னி சந்தித்துப் பேசினார். ஏற்கனவே ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதித்திருந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக வரிகள் குறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2025 அக்டோபரில் தென் கொரியாவில் நடந்த மாநாட்டிற்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் தற்போது சந்தித்துள்ளது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.