பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை அக்கட்சியின் தேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி கே.லட்சுமண் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதன்படி, புதிய தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 19-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 20-ஆம் தேதி புதிய தலைவர் யார் என்பது முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்சியின் தேசிய செயல் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் நிதின் நபீன், ஜே.பி. நட்டாவுக்குப் பின் பாஜகவின் அடுத்த தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏ-வான நிதின் நபீன், கடந்த டிசம்பர் மாதம் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது 46 வயதில் பாஜகவின் மிக இளம் வயது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். இதனையொட்டி அனைத்து மாநிலங்களின் பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.