முகப்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2026: 22 காளைகளை அடக்கி கார் வென்ற பாலமுருகன்; சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசு!
மதுரை அவனியாபுரத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி மிகுந்த உற்சாகத்துடன் அரங்கேறியது.
தமிழக அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இப்போட்டியில், சுமார் 937 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வீர விளையாட்டில் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்க முற்பட்டனர்.
இதில் வலையங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலமுருகன் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
அவருக்குத் தமிழக முதல்வர் சார்பில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி இரண்டாம் இடத்தையும், 16 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ரஞ்சித் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். காளைகளுக்கான வரிசையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த விருமாண்டி சகோதரர்களின் 'முத்து கருப்பன்' காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்குத் துணை முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டது.
இப்போட்டியின் போது மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என சுமார் 60 பேர் வரை காயமடைந்தனர், அவர்களில் பலத்த காயமடைந்தோர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்த இப்போட்டி, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்புடன் நிறைவடைந்தது.