இளைஞர்கள் சனாதனத்தை நம்பனும்".. ஆனந்த் அம்பானி திடீர் பாதயாத்திரை.. காரணம் என்ன?

02 April 2025

பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திடீரென்று பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகா வரை அவர் பாதயாத்திரை புறப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது



நம் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொண்டார். அவர் ராதிகா மெர்ச்சன்ட்டை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் 2024 ஜுலை 12ம் தேதி நடந்தது.

திருமண விழா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் நம் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இவரது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி பல நூறு கோடி செலவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது

இந்நிலையில் தான் ஆனந்த் அம்பானி திடீரென்று பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து சுமார் 140 கிமீ தூரம் உள்ள துவாரகா நோக்கி அவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். தினமும் இரவில் 10 முதல் 12 கிமீ தொலைவை அவர் நடக்கிறார். பலத்த பாதுகாப்புடன் அவர் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். ஆனந்த் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்கள் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து அவரது பாதயாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஆனந்த் அம்பானி அருகே யாரையும் நெருங்க விடாமல் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டு வருகிறது. ஆனந்த் அம்பானியின் இந்த திடீர் பாதயாத்திரையின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

அதாவது ஆனந்த் அம்பானிக்கு தற்போது 29 வயது ஆகிறது. மார்ச் 10ம் தேதி அவரது பிறந்தநாளாகும். தனது 30வது பிறந்தநாளையொட்டி அவர் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரை மூலம் அவர் ஜாம் நகரில் இருந்து துவாரகா சென்று அங்குள்ள துவாரகேஷ் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக தான் அவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

தற்போது வரை அவர் மொத்தம் 60 கிமீ தொலைவை பாதயாத்திரை மூலம் கடந்துள்ளார். இன்று அவர் தனது 5வது நாள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரையை இன்னும் 5 நாட்களில் அவர் முடிக்க உள்ளார். அதன்பிறகு அவர் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து பிறந்தநாளை கொண்டாட உள்ளார். முன்னதாக பாதயாத்திரையின் ஒருபகுதியாக வழியில் உள்ள கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இந்த பாதயாத்திரை பற்றி ஆனந்த் அம்பானி கூறுகையில், ‛‛சனாதன தர்மத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன். கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு பலம் தந்துள்ளது. நான் 5 நாட்களாக நடந்து வருகிறேன். அடுத்த ஐந்து நாட்களில் நான் துவாரகாதீஷ் கோவிலை அடைவேன். நான் பாதயாத்திரை மேற்கொள்வது இதுதான் முதல் முறை. இளைஞர்கள் கடவுளை மதிக்க வேண்டும். சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் இருக்கும்போது நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது'' என்றார்.