மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மேற்கு வங்கப் பயணம்

16 February 2026

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 18-ஆம் தேதி அந்த மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். அன்று மதியம் கொல்கத்தா விமான நிலையம் சென்றடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாயாபூர் சென்று, இஸ்கான் (ISKCON) கோவிலில் நடைபெறும் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகுரின் 152-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.


சுமார் இரண்டு மணி நேரம் கோவிலில் செலவிடும் அவர், அங்கு நடைபெறும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் கூட்டுறவுத் துறையை நவீனப்படுத்தவும், அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.