அமெரிக்காவில் கலிதா ஜியாவின் பெயர்: மிச்சிகன் மாகாணத்தில் தெருவுக்குப் பெயர் சூட்டி கௌரவம்

09 January 2026

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.




வங்கதேசத்தின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்து, அந்நாட்டு அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தியவர் கலிதா ஜியா. இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹாம்ட்ராம்க் (Hamtramck) நகரத்தில், கலிதா ஜியாவை கௌரவிக்கும் விதமாக ஒரு தெருவுக்கு அவரது பெயரை வைக்க அந்த நகர சபை முடிவு செய்தது. ஹாம்ட்ராம்க் நகரத்தில் உள்ள ஜோசப் காம்பாவ் மற்றும் கோனால்ட் தெருக்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதிக்கு ‘கலிதா ஜியா தெரு’ (Khaleda Zia Way) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு ஹாம்ட்ராம்க் நகர சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது. குறிப்பாக, அந்த நகர சபை கவுன்சிலில் தற்போது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தொடர்ச்சியான மற்றும் தீவிர முயற்சியால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் வங்கதேசத் தலைவரை கௌரவிக்கும் இந்தச் செயல் அந்நாட்டு மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.