கேரள மாநிலத்தில் அமீபா மூளை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இதனால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் இதுவரை மூன்று மாத குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கோட்டையம் மாவட்டத்தை சேர்ந்த 48 வயது பெண் ஒருவருக்கு கடும் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அமீபா மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு மேலும் 12 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.