92,700 டன் எல்.பி.ஜி.யுடன் இந்தியாவை நோக்கி வரும் கப்பல்கள்
14 March 2026
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல்கள் செல்வதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது சுமார் 92,700 டன் சமையல் எரிவாயுவை (LPG) ஏற்றி வரும் இரண்டு இந்திய கப்பல்கள் அந்தப் பகுதியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. 'பி.டபிள்யூ ஹார்மனி' (BW Harmony) மற்றும் 'கிரிஸ்டல் சன்ரைஸ்' (Crystal Sunrise) ஆகிய இந்த இரண்டு கப்பல்களும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட தொடர் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பலனாக இந்தக் கப்பல்கள் ஜலசந்தியைக் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எல்.பி.ஜி. சரக்குகள் இன்னும் சில நாட்களில் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தற்காலிகமாக நீங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.