நவம்பர் 26 - இந்திய அரசியலமைப்பு தினம்

06 November 2025

இந்திய அரசியலமைப்பு தினம் - நவம்பர் 26

நமது இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த நாளையே நாம் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். ஒரு வீட்டை நிர்வகிக்க எப்படி விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறதோ, அது போல தான் நம் நாட்டையும் நிர்வகிக்க விதிமுறைகளும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. அத்தகைய நோக்கில் உருவாக்கப்பட்டதே நம் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகும். அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டிற்கு தேவையான அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கி அவற்றை ஆவணப்படுத்துவதோடு, தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது. பின்னர் இந்தச் சட்டத்தின் துணையோடு தான் அந்த நாடு ஆளப்படுகிறது. நம் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையானது "இந்தியா இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, மக்களாட்சி கொண்ட குடியரசு" என வரையறுக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் தான், நமது இந்திய நாட்டின் உயர்ந்தபட்ச சட்டமாக விளங்குகிறது. இது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை  உருவாக்கும் நோக்கில் டிசம்பர் 1946 ல் 389 உறுப்பினர்களைக் கொண்ட  இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக Dr.ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக Dr. B.R. அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1946  டிசம்பர் 9 ம் நாள் இந்திய அரசியலமைப்பினை எழுதுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக 60 நாடுகளின் சட்டங்கள் வாசிக்கப்பட்டு, அதிலிருந்து சிறந்த பகுதிகளைக் கொண்டு நம் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு சுமார் 64 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதில் 2,473 சட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு, சுமார் 2,000 சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதப்பட்டது. 2 வருடங்கள், 11 மாதங்கள், 17 நாட்களுக்கு பிறகு நம் அரசியலமைப்பு சட்டம் 1949 நவம்பர் 26 அன்று  முழுமையாக தயாரானது. அன்று தான் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆகையினால் தான்  நவம்பர் 26 ம் நாளை நாம் அரசமைப்புச் சட்ட நாளாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். தொடக்கத்தில் 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள் இடம் பெற்றிருந்தன (தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது). இதன் உண்மைப் பிரதிகள் (இந்தி&ஆங்கிலம்) தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதுடன், நாம் நமது நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை பற்றியும் குறிப்பிடுகிறது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, நீதித்துறையை நாடுவதன் மூலம், அதனை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்துள்ளது.  இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நம் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை போற்றி வணங்குவோம். சட்டத்தின் வழிகாட்டுதலின்படி நடப்போம்.

--- க.வெங்கடாசலம்