முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, உதுமானியகிலாபத் , பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா,அமெரிக்கா,இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன..1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது.
கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின.
போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின.
போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும்.
எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப்படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன.
இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன.
இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர்.
யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது.
போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மைதொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு,உதுமானிய கிலாபத் என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின.சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது.
யூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.
மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்” ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன.
ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா அச்சங்கத்தில் கடைசிவரை சேரவில்லை.
செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும்,குடியரசுகளும் உருவாயின. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.