சகோதரனை கொன்றவருக்கு நூதனமான தீர்ப்பு !
சகோதரனை கொன்றவருக்கு நூதனமான தீர்ப்பு !
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ள ஊர் தாமரைப்பாக்கம். இவ்வூரில் அக்னீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் முகமண்டபக் கிழக்குக் குமுதத்தில் வியப்பான தகவல் ஒன்றைக் கூறும் கல்வெட்டுள்ளது.
"ஸ்வஸ்திஸ்ரீ இலங்கையும் யிரட்டப்பாடியுங் கொண்டு பேராற்றங்கரைக் கொப்பத்தாஹவமல்லனை புறங்கண்டவன் ஆனையுங் குதிரையுங் பெண்டிர் பண்டாரமுங் கொண்டு விஜையாபிஷேகஞ் செய்து ஸிம்ஹாஸனத்து வீற்றிருத்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்த்ர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது "
இரண்டாம் இராசேந்திர சோழரின் 5 ஆவது ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 1057 - ல் சித்திரமேழிப் பெரியநாட்டார் குழு முன் ஒரு வழக்கு வந்தது. அக்குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி விசாரித்தார்கள்.
வழக்குக் கொடுத்தவர் :
"பங்களநாட்டுத் தெற்குச் சேளுறூர் நாடான புதநலப்பாடி நாட்டுக் கங்கபுரத்தைச் சேர்ந்த வெள்ளாளன் தருப்பேருடையான் தாழிகோனன் "
வழக்கு :
"தாழிகோனனுக்கு சங்கரத்தடியன் மற்றும் பெரியான் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒருநாள் இருவருக்குமிடையே வாய்சண்டை (சூடுபடுதல்) ஏற்பட்டது. அதில் தம்பியை அண்ணன் அரிசப்பட்டு (கோவப்பட்டு) அடிக்க, தம்பியும் அண்ணனை எதிர்த்தடிக்க தம்பி அடித்த அடியில் அண்ணன் இறந்துவிடுகிறார். இந்நிகழ்வைக் கூறி தந்தையார் நியாயம் கோறுகிறார்.
வழக்கை விசாரிக்கும் சபைக் குழுவினர் தாழிகோனனிடம் "உனக்கு இவ்விருவருமல்லாது மக்களுள்ளரோ " என்று கேட்டனர். அதற்கு தாழிகோனன் "மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயு நானுமேயுள்ளோம்" என்று சொன்னார். அவ்வாறெனின் "அர்த்தந் தானுண்டோ (செல்வம் உண்டோ) என்று " கேட்டனர். செல்வமுமில்லை இல்லை என்றார் தந்தை. குழுவினர் அவ்வழக்கை ஆராய்ந்து முடிவெடுத்தனர்.
தீர்ப்பு :
இன்றைய சட்டப்படி செய்யப்பட்ட கொலைக்கு குற்றவியல் தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கி சிறையில் அடைப்பார்கள். கொலையைப் பொருத்து தூக்குத் தண்டனையும் கொடுப்பார்கள்.
அன்றைய நெறிமுறைப்படி கொலைக்கு மரண தண்டனையே வழக்கத்திலிருந்திருக்கும். ஆனால் அன்று கொடுக்கப்பட்ட தண்டனையோ வியப்பானவை.
"ஒரு குடிக்கெடானமையாலும் இவர்களை ரக்ஷிப்பாரிலாமையாலும் அர்த்தம் இல்லாமையாலும் திருத்தாமரைப்பாக்கத்துத் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தா விளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தகப்பனையும் ரக்ஷிப்பானாக தம்ம நோக்க இவனிதற்குப்பட வேண்டா வென்று பெருக்காளர் விதித்தமையில் இது சுத்தப்பட்டிகையாகவும் "
அதாவது இக்கொலையால் பிறக் குடிகள் யாருக்கும் கேடாகவில்லை பெற்றோரை பாத்துக்க வேறாளில்லை செல்வமும் இல்லை ஆகையால் தாமரைப்பாக்கத்து அக்னீசுவரமுடைய மஹாதேவருக்கு விளக்கு எரிக்கவும் வயசான தனது பெற்றோரைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறப்பணி செய்யும் காரணத்தினால் கொலை செய்தவர் இறக்கவேண்டாம் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இத்தீர்ப்புக்கு "#சுத்தப்பட்டிகை" என்று பெயர். குற்றம் செய்தமைக்காக அறவழியில் ஈடுபடுத்தியும் பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பினை அளித்தும் குற்றம் செய்தவரின் உயிரைக் காத்தனர். அவ்வாறான சூழ்நிலை இல்லையெனில் அவர் இறந்திருக்குமாறு தண்டனை அளித்திருக்கக்கூடும் என்பதும் உணர முடிகிறது. இத்தீர்ப்பால் பெற்றோரும் காப்பாற்றப்பட்டனர் கோவிலுக்கு விளக்கும் கிடைத்தது.
தகவல் : தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், வழிகாட்டும் கல்வெட்டுகள், கல்வெட்டில் வாழ்வியல்.
நன்றி : Vicky Kannan , B. Anandan