கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? எடியூரப்பா வெளியிட்ட தகவல்!

22 July 2021


முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜக விற்குள் நீண்ட நாட்களாக உட்கட்சி பூசல் நடைபெற்று வந்தது. அதில் முதலமைச்சர் எடியூரப்பா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவினர் போர்க்கொடி தூக்கி வந்தனர். இதற்கிடையே எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் எடியூரப்பா. 


இந்த சூழ்நிலையில், இன்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் 25-ஆம் தேதி கட்சி மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் கர்நாடகா பாஜகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா ராஜினாமா செய்தால் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை 3 பாஜக முக்கிய புள்ளிகளில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப் படலாம் என்று கர்நாடகா பாஜக வட்டாரங்களில் செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.