உலகில் ஆதிக்கம் செலுத்தப்போகும் டெல்டா - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

22 July 2021


இன்னும்் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா அனைத்து நாடுகளிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தப் போவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, தற்போது 124 நாடுகளில் பரவியுள்ளது. கடந்த வாரத்தை விடவும் கூடுதலாக 13 நாடுகளில் தொற்றுப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வகைகளைக் காட்டிலும் டெல்டா வகை அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிரிட்டனில் முதலில் உறுதி செய்யப்பட்ட ஆல்ஃபா வகை 180 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட பீட்டா வகை 130 நாடுகளிலும், பிரேசிலில் உறுதி செய்யப்பட்ட காமா வகை 78 நாடுகளிலும் பரவியுள்ளது. கிழக்கு பசிபிக் பகுதிகளில் 30 சதவீதமும், ஐரோப்பிய பகுதிகளில் 21 சதவீதமும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.