திருவாரூர் அருகே மழைநீர் தேங்கும் சாலையால் அவதிப்படும் மக்கள்: அதிகாரிகள் கவனிப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

15 July 2021


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கமாலியா தெருவில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்குவதால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள சாலைகளில் மிகவும் முக்கிய சாலையாக கமாலியா தெரு சாலை இருந்து வருகிறது. இந்தச் சாலை கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் வழித்தடத்தில் உள்ளதால் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் என தினமும் அதிக அளவிலான வாகனங்கள் இந்த வழியாகச் சென்று வருகின்றன. 

மேலும் இந்த சாலையை கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவ--மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையின் அருகில் இந்த சாலை இருப்பதால், இந்த சாலையை கடந்து தான் அரசு மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் சென்று வர வேண்டும். 

இந்த நிலையில் சமீபத்தில் கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டதால், அந்த சாலை மேடான நிலையில், கமாலியா தெரு செல்லும் சாலை முகப்பில் பள்ளமான சாலையாக அமைந்துவிட்டது. இதனால் லேசான மழை பெய்தால் கூட கமாலியா தெரு சாலையில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

இச்சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் பள்ளமான இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்லும் அப்பகுதி மக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதால் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே கூத்தாநல்லூர் கமாலியா தெரு சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உடன் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா?