கண் நலன் காக்க உதவும் காய்கறிகள்,பழங்கள்

15 September 2021

கொரோனா காலகட்டமென்பது எதை கொண்டுவந்ததோ இல்லையோ, கண் சோர்வு - கண் வலி - கண் வறட்சி என கண் சார்ந்த அசௌகரியங்கள் மற்றும் பார்வை குறைபாடு போன்றவற்றை பெருவாரியான மக்களுக்கு கொண்டுவந்துவிட்டது. அதீதமான இணைய உபயோகம், அதற்காக மொபைல் அல்லது டெஸ்க்டாப் பார்ப்பது போன்றவை இப்பிரச்னைகளுக்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. போதாத குறைக்கு திரையரங்கு தொடங்கி உணவு ஆர்டர் வரை எல்லாமே செயலிகளுக்குள் சுருங்கிவிட்டது. இப்படி அனைத்துமே டிஜிட்டல் ஆகிவிட்டதால், அதற்கான பலனை நம் கண்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதுதான் காரணம் என நமக்கு தெரிந்தாலும்கூட, இந்த பெருந்தொற்று காலத்தில் தவிர்க்க முடியாத சூழலில்தான் அனைவருமே இருக்கிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி, "உலகெங்கிலும் உள்ள மக்களில், ஏறத்தாழ 1 பில்லியன் மக்கள் தடுக்கக்கூடிய பார்வைக்குறைபாட்டுடன் இருக்கின்றனர். அதில் சிலர் தங்களுக்கு பாதிப்புள்ளதையே அறிந்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இப்படி பார்வை குறைபாட்டை உதாசீனப்படுத்தினால், அது வாழ்நாள் பாதிப்பாக மாறி தினசரி வாழ்க்கையை பாதிக்கும் ஆபத்துள்ளது” எனக்கூறியுள்ளது. இதை தவிர்க்க கண் அசௌகரியங்களுக்கு கண் பரிசோதனைகள் செய்துக்கொள்வது மிக மிக முக்கியமாகிறது.

கண் நலனை பொறுத்தவரை, சிலர் தினமும் சில நிமிடங்கள் கண்ணுக்கு இதமாக வெள்ளரிக்காய் / தக்காளி ஸ்லைஸ் வைப்பது, தேங்காய் பால் தேய்த்துக்கொள்வது, கருவளையத்தை தடுக்க உருளைக்கிழங்கு ஸ்லைஸ் வைப்பது, க்ரீம் ஏதேனும் தேய்ப்பது என விதவிதமாக நிறைய வழிமுறைகள் செய்வதுண்டு. ஆனால் கண் பராமரிப்புக்கும் - பார்வை சார்ந்த சிக்கலை தடுப்பதற்கும், இப்படி வெளிப்புறங்களில் காய்கறிகள் பழங்களில் வழிமுறைகள் செய்துகொள்வதை விட, ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துவதே சரியாக இருக்குமென்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அந்தவகையில், கண் நலனின் பராமரிப்புக்கு என்னென்ன உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமென நமக்கு பரிந்துரைக்கிறார் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்.

"கண் பாதுகாப்போடு நேரடியாக தொடர்புகொண்டது, வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் ஏ உடலில் குறைந்துபோகும்போது, மாலைக்கண் நோய் போன்ற பிரச்னைகளெல்லாம் வரும். இது விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவுகளில் அதிகம் இருக்கும். உதாரணத்துக்கு முட்டையின் மஞ்சள் கரு, விலங்கின் ஈரல் இறைச்சி, பால் மற்றும் பாலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களில் இது அதிகம் இருக்கும்.

இதேபோல பி கரோட்டின் சத்து அதிகமுள்ள உணவுப்பொருள்களில் கண்களுக்கு மிகவும் நல்லது. அந்தவகையில் இது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற உணவுப்பொருள்களில் இந்த சத்து அதிகமிருக்கும். அப்படி பி கரோட்டின் அதிகமுள்ளவைதான் கேரட், பப்பாளி, கேப்ஸிகம் முதலியவை. மேலும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காய்கறி - பழங்கள், கீரைகள் அனைத்திலும் இது அதிகமிருக்கும்.


வைட்டமின் பி, கண் நலனுக்கு பார்வைத்திறன் சீராக இருப்பதற்கும் மிகவும் உதவும். இவை, கொய்யா, எலுமிச்சை போன்றவற்றில் அதிகமிருக்கும்.

வைட்டமின் இ அதிகமுள்ள உணவுப்பொருள்களும், கண் விழித்திறைக்கு மிகவும் உதவும். இது மாம்பழம், அவகேடோ, புரோக்கோலி போன்றவற்றில் கிடைக்கும்.

இவற்றைப்போலவே துத்தநாகம் சத்து அதிகமிருக்கும் பாதாம் மற்றும் விதைகளில் அதிகமிருக்கும். இந்தச் சத்து அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, Macular Degeneration என்கிற பார்வைக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும்” என்கிறார் அவர்.

இந்த உணவுகளுடன் சேர்த்து புகைப்பழக்கமின்மை, மதுப்பழக்கமின்மை போன்றவையும் கண்களுக்கு அவசியம். உடன், தினமும் இரவு 8 மணி நேர நல்ல உறக்கம் என்பது கண் நலனுக்கு அத்தியாவசிய தேவை.