பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

26 January 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில்,தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன்படி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்படும் எனவும் வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சிகள் உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.