முககவசம் அணியாதவர்களுக்கு ஓட்டுபோட அனுமதி கிடையாது

06 April 2021

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. 14,276 வாக்குப்பதிவு எந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்கள் (வி.வி.பேட்) 7,984 ஆகியவை சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற 2 சுகாதாரப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளிலும் பொதுசுகாதாரத்துறை மூலமாக கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய கையுறை, முழு உடல் கவச உடை போன்ற மருத்துவக்கழிவுகளை சேகரிக்க 6 ஆயிரம் மஞ்சள் நிறப்பையுடன் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காலி, கழிவறை, குடிநீர் வசதி, சாமியானா பந்தல் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. 1,061 வாக்குச்சாவடிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிபுரிய 1,061 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் முழுவதுமாக மகளிர் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய வாக்குச்சாவடி ஒன்றும், மாதிரி வாக்குச்சாவடி 4-ம் அமைக்கப்பட்டுள்ளது. 30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 577 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 2,467 இதர வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3,074 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள சீட்டு கொண்டுவர இயலாத நபர்கள் வாக்குச்சாவடியில் உள்ள நிலைய அலுவலரை அணுகி தங்களது வாக்குச்சாவடி மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஒட்டுனர் உரிமம், பான் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு உள்பட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள 12 ஆவணங்களின் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.