தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன

08 October 2021

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரிக்கு, ‘அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 கல்லூரிக்கு உயர்க்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். 

இக்கல்லூரிகளை இந்த ஆண்டு திறக்க உள்ளதாக கூறிய அமைச்சர் சேகர் பாபு, அது சார்ந்த விவரங்களை பகிர்ந்திருந்தார். அதன்படி கல்லூரிகள் பெயர்களின் விவரங்கள்: சென்னை கொளத்தூர் எவர் எக்ஸல் பிளாக்கில் அருள்மிகு ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி; நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அர்த்த நாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயர்களில் அந்த 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
B.com, BBA, BCA, Bsc.cs ஆகிய நான்கு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை எனவும் இன்று முதல் வரும் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.