ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

31 August 2021

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை முழுமையாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் இந்திய நேரப்படி அதிகாலை சுமார் ஒரு மணிக்கு புறப்பட்டதாக அமெரிக்க ராணுவ ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி கூறினார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகளின் தலைவரும், அமெரிக்க தூதரும் கடைசி நபர்களாக விமானத்தில் ஏறியதாகவும் அவர் கூறினார். அமெரிக்கப்படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை தலிபான்களின் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். அமெரிக்க ராணுவ விமானங்கள் வெளியேறியதைத் தொட்ர்ந்து காபூலின் பல பகுதிகளிலும் தலிபான்கள் துப்பாக்கிகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருக்கபபோவது இல்லை என எடுக்கப்பட்ட முடிவு குறித்து நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்ற உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அருகே ஐந்து ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது. இவை விமானநிலையத்தின் இடைமறிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஏராளமானோர் தொடர்ந்து விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஆக்ஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அங்கு தலிபான்கள் ஆட்சியை சுலபமாக கைப்பற்றினர். இருப்பினும் அமெரிக்கப்படைகள் அறிவித்தபடி வெளியேறும் என பைடன் கூறியிருந்தார். தற்போது அறிவிக்கப்பட்ட கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளன.