அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்பது காலத்தின் கட்டாயம் - அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார்

19 June 2022

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்பது பல்வேறு தரப்பு நிர்வாகிகளின் விருப்பமாகவும், அது காலத்தின் கட்டாயமாகவும் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான பணிகள் குறித்து விவாதிக்கும் வகையில், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். ஒற்றை தலைமை கோரி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒற்றைதலைமை விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார் கூறுகையில், அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்பது பல்வேறு தரப்பு நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. மேலும் அது காலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அதிமுகவில் தகுதியானவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும், செயல்படாத நிர்வாகிகளை வெளியேற்ற வேண்டும் எனவும் கூறினார்.