தொடர் மழை காரணமாக குடிசைகள் முற்றிலும் சேதமான நிலையில் தங்குவதற்கு இடமின்றி அவதி

18 November 2021


*மேலூர் அருகே 15 வருடமாக குடியிருப்பிற்காக போராடி வரும் மக்கள், தொடர் மழை காரணமாக குடியிருந்த குடிசைகள் முற்றிலும் சேதமான நிலையில் தங்குவதற்கு இடமின்றி அவதி..*


மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆலம்பட்டி பகுதியில் உள்ள கணக்கன்பிள்ளை கண்மாய் கரையோரத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர். 

இவர்கள் பாத்திரங்கள் பழுது பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வரும் நிலையில், தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் மேலூர் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, இவர்களது குடியிருப்பு முற்றிலும் சேதமானது மேலும் அருகேயுள்ள கணக்கன்பிள்ளை கண்மாய் நிரம்பி,  இவர்களது குடியிருப்புப் பகுதிகள் நீர் புகுந்ததால், தங்க வழியின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் அருகேயுள்ள கலையரங்கத்தில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதையறிந்த கிராம வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன்   ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி கலையரங்கத்தில் தங்கியிருந்தவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகிலுள்ள பட்டூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஒரு பகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கிராம வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது...

இவர்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக பட்டூர் அருகே இடம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இவர்கள் அனைவருக்கும் அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என தெரிவித்தனர்...