சமூகநீதி, சுயமரியாதை அரசியல் பேசும் நெஞ்சுக்கு நீதி

21 May 2022

ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்த பிறகு அதிலிருக்கும் கதாபாத்திரங்களும், கருத்துகளும் நம்மில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்படும்.


அப்படிப்பட்ட ஒரு சில படங்களின் பட்டியலில் நெஞ்சுக்கு நீதி திரைப்படமும் இணைந்துள்ளது.


உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சியில் ஏ.எஸ்.பியாகப் பொறுப்பேற்கிறார் விஜயராகவன் ( உதயநிதி ). அந்த ஊரில் இரு பட்டியலின சிறுமிகள் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். இன்னொரு சிறுமியை காணவில்லை. ஓரிரு நாளில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இரு சிறுமிகளின் சடலங்கள் கிடைக்கின்றன. இந்த சிறுமிகளின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் சாதி வன்மங்களையும் ஆதிக்க சாதியினரின் அரசியல் சூழ்ச்சிகளையும், காணாமல் போன அந்த ஒரு சிறுமியை எப்படி உதயநிதி கண்டுபிடிக்கிறார் என்பதே
படத்தின் கதை 




இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற Article 15 படத்தின் தமிழ் ரீமேக் என்பதையும் தாண்டி வட இந்திய அரசியலையும், இங்குள்ள அரசியலையும், ஹிந்தி எதிர்ப்பையும் மிக அழகாக கையாண்டுள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். நம்மை இங்கு எரிக்க தான் விடுவாங்க எரிய விடமாட்டாங்க என்கிற வசனங்களுக்கு பின்னால் இருக்கும் சாதிய அரசியலை அழுத்தமாக இயக்குனர் பதிய வைத்துள்ளார்.


உதயநிதி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படமும் அதில் பேசப்பட்டுள்ள சமூக நீதி கருத்துகளும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அஸ்திவாரமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு வெளியான அவரது படங்களை ஒப்பிடும்போது இதில் தன்னுடைய முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எதிராக உயர் சாதியினரால் நடத்தப்படும் அநீதிகளை தட்டி கேட்கும் காட்சிகள் நம்முடைய உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார்.


நம் நாட்டில் சகலத்துறைகளிலும் ஒளிந்து கொண்டு தன் வித்தைகளை காட்டுகிறது சாதி. இதன் வெளிப்பாடாக சாதி ரீதியான மோதல்கள் அரசியல் கட்சிகளில் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் தமிழ்நாட்டில் கூட ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அவர் துன்புறுத்தப்பட்டு, அவர் சமைத்த உணவும் வீணாக்கப்பட்டதில் துவங்கி நீட் தேர்வால் காலமான டாக்டர் அனிதா மற்றும் காவல் துறையினருக்குள் நிலவும் சாதிய பாகுபாடு என்று அனைத்து நிலையிலும் மண்டிக்கிடக்கும் சாதிப் பிரச்னையை, உண்மைச் சம்பவங்களை சில, பல கற்பனை புனைவுகளோடு சகல தரப்பினரும் புரியும் வகையில் வகையில் திரைப்படம் உள்ளது.


குறிப்பாக பெண் மருத்துவருக்கு அனிதா என பெயரிடப்பட்டது மிக அழுத்தமான அரசியல், சமூக குறியீடு. காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து அவருக்கு நெருக்கடி வரும்போது நாங்கள் துணையாக இருப்போம் என உதயநிதி பேசும் வசனத்திற்கு திரையரங்குகளில் பலத்த கைதட்டல். அனைவரும் சமம் என்றால் யார் தான் ராஜா ஆகுவது போன்ற வசனங்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.


தன்யா ரவிச்சந்திரன், ஆரி, மயில்சாமி என படத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் தங்களுடைய கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இன்று இருந்திருந்தால் உதயநிதியை வாரி அணைத்து முத்தமிட்டு இருப்பார். அப்படி காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளார் உதயநிதி. நெஞ்சுக்கு நீதி போன்ற பல திரைப்படங்கள் வெளியானால் மட்டுமே இங்கு சிலருக்காவது நீதி கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.