கோடை விடுமுறைக்கு பின் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

20 June 2022

கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. கடந்த 2 கல்வி ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமாக ஜூன் மாதத்தில் வகுப்புகள் இந்த ஆண்டு முதல் மீண்டும் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தாமதமாக முடிந்த நிலையில், அவர்களுக்கான கோடை விடுமுறை இம்மாதம் 1-ந்தேதியில் இருந்து விடப்பட்டன.

கோடை விடுமுறைக்கு பின், 2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்புக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன. முதல் 2 நாட்கள் இவர்களுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 12-ம் வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளின் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, அவர்களுக்கு வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.