வட கொரியாவின் விசித்திர சட்டங்கள்!

08 June 2021

அமெரிக்கா, தென் கொரியா போன்ற வெளிநாடுகளின் அடையாளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் கடுமையான புதிய சட்டம் ஒன்றை வடகொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும். இது ஏன்?


இன்டர்நெட் கிடையாது, சமூக வலைத்தளங்கள் இல்லை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில தொலைக்காட்சிகளில் அரசு என்ன விரும்புகிறதோ அதை மட்டுமே பார்க்க முடியும். இப்படி எப்போதும் முழு முடக்கத்தில் இருப்பதைப் போன்ற நிலை எப்படியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இப்போது அதிபர் கிம் ஜோங் உன் கட்டுப்பாடுகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார். "பிற்போக்கு சிந்தனை" என்று அரசு கூறும் வெளிநாட்டு அடையாளங்களை முற்றாக அழிக்கும் வகையிலான கடுமையான சட்டத்தை கிம் ஜோங் உன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அத்தகைய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும். இத்துடன் முடிந்துவிடவில்லை.

அரசு ஊடகத்துக்கு கிம் ஜோங் உன் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். இளைஞர்கள் மத்தியில் நிலவும் "விரும்பத்தகாத, தனித்துச் செயல்படுகிற, சோசலிச எதிர்ப்பு வழக்கங்களை" அழிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு மொழிவழக்கம், சிகையலங்காரம், உடைகள் போன்றவை "ஆபத்தான நஞ்சு" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கே-பாப் எனப்படும் தென்கொரிய இசைப் பிரபலங்களைப் போல முடிவெட்டிக்கொண்டு, முட்டிக்கு மேலே ஆடை அணிந்திருந்த மூன்று பதின்மவயதினரை சீர்திருத்தப்பள்ளிக்கு அரசு அனுப்பிவிட்டதாக தென் கொரியாவில் இருந்து செயல்படும் டெய்லி என்கே என்ற ஆன்லைன் இதழ் கூறுகிறது.

அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் இல்லாமல் கிம் ஜோங் உன் நடத்தும் போர் இது.

நாட்டில் மக்கள் வேதனைகளை அனுபவித்து வருவதால் அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எந்தத் தகவலும் வந்துவிடக்கூடாது என்பதில் கிம் கவனமாக இருக்கிறார் என நிபுணர்கள் கூறுகிறார்கள்

வடகொரியாவில் லட்சக்கணக்கான மக்கள் பசியில் வாடுவதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழலிலும் அவர்கள் அரசின் தீவிர பரப்புரைக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர, நல்ல வாழ்க்கைக்குள் சென்றுவிடக்கூடாது என்பதில் கிம் உறுதியாக இருப்பதாக தென்கொரியாவில் இருந்து செயல்படும் நாடகக் குழு தனது நிகழ்ச்சியில் காட்சிப்படுத்துகிறது.

முன் எப்போதும் இருந்ததை விட இப்போது வெளியுலகத் தொடர்பு முற்றிலுமாக அறுந்துபோன நிலையில் இருக்கிறது வடகொரியா. கொரோனா தொற்று தொடங்கிய பிறகு நாட்டின் எல்லைகள் முழுமையாகச் சீலிடப்பட்டிருக்கின்றன. சீனாவில் இருந்து அத்தியாவசிய பொருள்கள் வருவது நின்றுவிட்டது. சில பொருள்கள் வந்து கொண்டிருந்தாலும், இறக்குமதியின் அளவு மிக மிகக் குறைந்துவிட்டது.

நிதியெல்லாம் அணுஆயுத திட்டங்களுக்கே அதிகமாகச் செலிவிடப்படுவதால் இத்தகைய தனிமைப்படுத்தும் முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கூடுதலாகச் சிதைத்துவிட்டிருக்கின்றன."மக்கள் முன்னெப்போதும் இல்லாத மோசமான சூழலைச் சந்தித்திருக்கிறார்கள்," என கிம் ஜோங் உன்னே கடந்த ஆண்டில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சட்டம் கூறுவது என்ன?

புதிய சட்டத்தின் பிரதி 'தி டெய்லி என்.கே. ஆன்லைன்' இதழுக்குக் கிடைத்திருக்கிறது.

"ஒரு ஊழியர் தவறு செய்தால் அந்த தொழிற்சாலையின் தலைவர் தண்டிக்கப்படுவார்.

ஒரு குழந்தை தவறு செய்தால் அதன் பெற்றோருக்கும் தண்டனை உண்டு. ஒருவரையொருவர் கண்காணிக்கும் வகையிலான முறையை வடகொரியா ஊக்குவிக்கிறது," என்கிறார் டெய்லி என்.கே. இதழின் தலைமை ஆசிரியர் லீ சாங் யோங்.

தென் கொரியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது பற்றிய எந்தக் கனவும் இளைஞர்களிடம் வந்து விடக்கூடாது என்பதே இதன் நோக்கம் என்கிறார் அவர்.

"வெளிநாட்டுக் கலாசாரங்கள் ஏதோ ஒரு வடிவில் நாட்டுக்குள் வந்துவிட்டால் இளைஞர்களிடம் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகிவிடும் என ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்"

"நெருக்கடி அதிகமானால் கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அமலாகும்" என வடகொரியில் இருந்து தப்பி வந்த சோய் ஜோங்-ஹூன் தெரிவிக்கிறார்.

சட்டத்தின் நோக்கம் நிறைவேறுமா?
வசதியானவர்கள் சீனாவில் இருந்து கடத்தி வரப்படும் வெளிநாட்டு திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத்தான் இதற்கு முந்தைய நடவடிக்கைகள் காட்டின.

பல ஆண்டுகளாக யூஎஸ்பி ட்ரைவ் மூலமாக வெளிநாட்டு நிகழ்ச்சிகள் வடகொரியாவுக்குள் கொண்டு வரப்பட்டன. அவற்றை எளிதாக மறைத்துக் கொள்ள முடியும் என்பதுடன் கடவுச் சொல் பயன்படுத்த முடியும் என்பதும் இதற்குக் காரணம்.

தவறான கடவுச் சொல்லை மூன்று முறை உள்ளிட்டால் யூஎஸ்பி ட்ரைவில் உள்ள அனைத்தும் அழிந்து விடும். மிகவும் ரகசியமான தகவல்கள் என்றால் ஒரேயொரு முறை தவறான கடவுச் சொல்லை உள்ளிட்டால் அவை அழிந்து விடும் வகையில் கூட அமைத்துக் கொள்ள முடியும்"

"குறிப்பிட்ட வகையிலான கணினிகளில் மட்டுமே பயன்படுத்துவது போன்ற முறைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படிச் செய்யும்போது வேறு யாரேனும் அதைக் கைப்பற்றி அதில் உள்ளவற்றைப் பார்க்க முடியாது"

தன்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் திரைப்படங்களைப் பார்ப்பதற்காக எவ்வளவு அபாயகரமான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டார்கள் என்பதை மி-சோ நினைவுகூர்கிறார்.

ஒரு முறை அவர்கள் ஒரு கார் பேட்டரியை வாடகைக்கு எடுத்துவந்து அதன் மூலம் தொலைக்காட்சி பார்த்தாகக் கூறுகிறார் மி-சோ. அது "Stairway to Heaven" என்ற தென்கொரிய நாடகத் தொடர்.

தன்னுடைய வளர்ப்புத் தாயுடனும் பின்னர் புற்றுநோயுடனும் போராடும் ஒரு பெண்ணைப் பற்றிய காதல் கதை இது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவில் இது மிகவும் பிரபலம். அப்போதெல்லாம் சீனாவில் இருந்து சி.டி., டி.வி.டி. போன்றவை கொண்டுவரப்பட்டன.

கட்டுப்பாடுகள் எப்போது தொடங்கியது?

தென்கொரிய திரைப்படங்களும், நிகழ்ச்சிகளும் பிரபலமாவதைக் கவனத்தில் கொண்ட வடகொரிய அரசு, 2002-ஆம் ஆண்டுவாக்கில் ஒரு பல்கலைக்கழத்தில் அதிரடிச் சோதனையை நடத்தியதில் 20 ஆயிரம் சி.டி.க்கள் பிடிபட்டன.

"அது ஒரேயொரு பல்கலைக்கழகத்தில் மட்டும். நாடு முழுவதும் எவ்வளவு சி.டி.க்கள் இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? வடகொரிய அரசு அதிர்ந்துவிட்டது. அதன் பிறகுதான் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன," என்கிறார் சோய்.

2009-ஆம் ஆண்டு சட்டவிரோதமாகப் படங்களைப் பார்த்ததற்காக தாம் கைது செய்யப்பட்டபோது தனக்கு 16 வயது என்று கூறுகிறார் கிம் கியும் ஹையோக். தனது தந்தை சீனாவில் இருந்து கொண்டுவந்த சில டிவிடிக்களை அவர் தனது நண்பருக்குக் கொடுத்திருந்தார்.

கைது செய்யப்பட்ட பிறகு தம்மை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் தூங்குவதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். நான்கு நாள்களுக்கு கையால் குத்தியும் காலால் உதைத்தும் துன்புறுத்தினார்களாம். தற்போது அவர் தென் கொரியாவின் சோல் நகரில் வசித்து வருகிறார்.

"வாழ்க்கை முடிந்து விட்டது என்று நான் அப்போது நினைத்தேன். எப்படி அந்த டிவிடிக்கள் எனக்குக் கிடைத்தன, அவற்றை யாருகெல்லாம் கொடுத்தேன் என்ற விவரங்களை அறிந்துகொள்ள அவர்கள் முயன்றார்கள். என் தந்தைதான் சீனாவில் இருந்து கொண்டுவந்தார் என்று நான் கூற முடியாது. பிறகு என்ன கூறுவது? நான் எதையும் கூறவில்லை. எனக்குத் தெரியாது, தெரியாது என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தேன்." என்கிறார் கியும் ஹையோக்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனது தந்தை தம்மை மீட்டதாக அவர் நினைவுகூர்கிறார். ஆனால் இப்போது கிம் கொண்டு வந்திருக்கும் புதிய சட்டங்களால் அப்படிச் செய்வது சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.

"இப்போது தண்டனை முகாம்களுக்கு அனுப்பப்படுவோரில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்த்துப் பிடிபட்டவர்கள்தான்" என்கிறார் சோய்.

"யாராவது இரண்டு மணி நேரம் வெளிநாட்டுத் திரைப்படங்களையோ நிகழ்ச்சிகளையோ பார்த்துவிட்டால் மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் தண்டனை முகாமுக்குச் செல்ல வேண்டும்" என்கிறார் சோய்.

கடந்த ஆண்டில் வடகொரியாவின் பல சிறைகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் புதிய சட்டங்களே அதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சோய் கூறுகிறார்.

இன்னும் மக்கள் வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது ஏன்?
"வெளிநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பது எங்களுக்கு அபாயகரமானதுதான். ஆனாலும் ஆர்வத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்" என்கிறார் கியும் ஹையோக்.

கியும் ஹையோக் போன்ற சிலருக்கு மட்டும்தான் வெளிநாடுகளில் சென்று படிக்க வாய்ப்புக் கிடைக்கும். அப்படி அவர் பெய்ஜிங்கில் படிக்கும்போதுதான் இன்நெட்டை பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.

"முதலில் வடகொரிய பற்றிய தகவல்களை நான் நம்பவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் பொய்கூறுவதாக நினைத்தேன். விக்கிபீடியாவில் கூறப்பட்டிருப்பது பொய் எனக் கருதினேன். எனது இதயமும் மூளையும் வெவ்வேறாகச் சிந்தித்தன"

"அதனால் வடகொரியாவைப் பற்றிய பல ஆவணப் படங்களைப் பார்த்தேன். பல செய்தித் தாள்களைப் படித்தேன். அதன் பிறகுதான் அவையெல்லாம் உண்மையென்று நம்பத் தொடங்கினேன். எனக்குள் மாற்றம் ஏற்பட்டது. ஆயினும் அது காலம் கடந்தது."

அதன் பிறகு கியும்-ஹையோக் சியோலுக்குத் தப்பி வந்து விட்டார்.

மி-சோவுக்கு ஃபேஷன் ஆலோசகராக வேண்டும் என்பது கனவு. அவர் தென் கொரியாவுக்கு வந்த பிறகு Stairway to Heaven என்ற நாடகத் தொடரில் பார்த்த எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்.

வட கொரியாவில் இருந்து வெளியேறுவது இப்போது கிட்டத்தட்ட சாத்தியமில்லாதது. ஏனென்றால் எல்லைகளில் கண்டால் சுடும் உத்தரவு அமலில் இருக்கிறது.

ஒன்றிரண்டு திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்ப்பதால் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடாது. ஆனால் வடகொரியாவின் தீவிரப்பரப்புரை மீது மக்களுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது என்கிறார் சோய்.

"வடகொரிய மக்களுக்குத் தீராத மனக்குறை உள்ளது. நான் அதற்கான காரணம் குறித்து அவர்களுக்குச் சொன்னாலும் புரிவதில்லை. அவர்களுக்கு யாராவது விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்."