சீனாவின் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் ஆராய்ச்சி

29 January 2021

உலகச் சுகாதார நிறுவனத்தின் சிறப்பு நிபுணர்கள் குழு , சீனாவின் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் ஆராய்ச்சிகளைத் தொடங்கவிருக்கின்றனர்.

கொரோனா கிருமிப்பரவல் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வூஹான் சென்றுள்ள நிபுணர்கள், தனிமைப்படுத்தப்படுவதற்கான இரண்டு வார உத்தரவை நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

வூஹான் கிருமி ஆராய்ச்சிக் கழகம், வூஹான் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு ஆய்வுக்கூடம் ஆகியவற்றுக்கு அவர்கள் நேரில் செல்லவிருக்கின்றனர்.

அத்துடன், கிருமி முதன்முதலாகப் பரவியதாக நம்பப்படும் ஹுவானான் (Huanan) கடலுணவு மொத்த விற்பனைச் சந்தைக்கும் நிபுணர்கள் செல்வார்கள்.

அவர்கள் சீன அறிவியலாளர்களை முதன்முறையாக இன்று நேருக்கு நேர் சந்திக்கவிருக்கின்றனர்.

கிருமித்தொற்று முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடனும் அவர்கள் பேசத் திட்டமிட்டுள்ளனர்.