கரண் ஜோகர், ஷாருக் வரிசையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்!

22 January 2022

பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்.


தற்போது அதே வழியைப் பின்பற்றி குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா! சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூட குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பிரியங்கா சோப்ரா சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வாடகைத்தாய் மூலம் தானும் தனது கணவர் நிக் ஜோனஸும் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.


பிரியங்கா சோப்ரா இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியான தருணத்தை குடும்பத்துடன் கொண்டாடி வருவதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். அவரது கணவர் நிக் ஜோனஸும் தனது சமூக வலைத்தளத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதை தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக்கொண்டுள்ள தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் இருந்த கணவர் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று செய்தி பரவியது. ஆனால் அதனை இருவரும் பின்னர் மறுத்திருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.


பிரியங்கா கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில் இயக்குனர் கரண் ஜோகர் வாடகைத்தாய் மூலம் திருமணமே செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டார். இதே போன்று பாலாஜி டெலிபிலிம் நிறுவனர் ஏக்தா கபூர் மற்றும் அவரது சகோதரன் துஷார் ஆகிய இருவருமே திருமணமே செய்து கொள்ளாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கூட தனது மூன்றாவது குழந்தையை வாடகைத்தாய் மூலமே பெற்றுக்கொண்டார்.