எல்லாருக்காகவும் பிரார்த்தியுங்கள்

09 April 2021

துஆ எனப்படும் பிரார்த்தனையைத் தொடங்கும் போது முதலில் அவரவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்து பிறருக்காக பிரார்த்திக்க வேண்டும். குர்ஆனில் இப்ராஹிம் (அலை) அவர்கள், நூஹ் (அலை) அவர்கள் ஆகியோரின் பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.
* என் இறைவா! தொழுகையை நிலை நிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக. என் வழித்தோன்றல்களில் இருந்தும் தொழுகையை நிலை நாட்டுபவர்களை தோற்றுவிப்பாயாக. எங்கள் இறைவனே! மேலும், எனது இந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.
* எங்கள் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக. இவ்வாறு பிரார்த்திக்கும் போது குறுகிய நோக்கம் கூடாது. சுயநலத்துடன் செய்யும் பிரார்த்தனையால் பயன் இல்லை.ஒருமுறை ஒரு கிராமவாசி மதீனாவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். 'இறைவா!என் மீதும், நபிகள்நாயகம் மீதும் மட்டும் கருணை புரிவாயாக! மேலும், எம் இருவரைத்தவிர வேறு எவர் மீதும் கருணை பொழியாதே' என பிரார்த்தித்தார்.இதனைக் கேட்ட நபிகள் நாயகம்,'இறைவனின் பரந்த கருணையை நீர் குறுகியதாக செய்து விட்டீர்' என்றார். எனவே, தொழுகையின் போது பரந்தமனதுடன் துஆ செய்யுங்கள்.