திருவாரூர் அருகே பழுதடைந்துள்ள வாய்க்கால் மதகு உடன் சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

11 June 2021


திருவாரூர் அருகே பழுதடைந்துள்ள வாய்க்கால் மதகு உடன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மற்றும் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வருவதற்குள் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத–னால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் அருகே அம்மையப்பன் அக்கரையில் ஓடம்போக்கி ஆற்றிலிருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு பாசன வசதிக்காக பாசன வாய்க்கால் ஒன்று பிரிந்து செல்கிறது. இந்த பாசன வாய்க்காலின் ரெகுலேட்டர் அருகே உள்ள மதகு சேதமடைந்துள்ளது.

பாசன வாய்க்கால் மதகு பழுதடைந்துள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் தண்ணீர் சென்றாலும் மதகு முற்றிலும் பழுதடையும் அவல நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தண்ணீர் பாசனம் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பழுதடைந்துள்ள பாசன வாய்க்கால் மதகினை உடனே சீரமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழுதான மதகு சீரமைக்கப்படுமா?

நிருபர் மீனா-திருவாரூர்