தகுதி உள்ளவர்கள்தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமனம் - அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

29 October 2020

தகுதி உள்ளவர்கள்தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக எம்.ஜி.ஆர் மருத்துவமனையின் துணை வேந்தராக இருக்கும் டாக்டர் சுதா சேஷயன், பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சுப்பையா சண்முகம் சமீபத்தில் சென்னையில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கணவனை இழந்த 52 வயதான அப்பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், குப்பைகளை கொட்டியும் உள்ளார்.

இது குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, தகுதி உள்ளவர்கள் தான் எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்துதான் நியமித்துள்ளது. நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் நல்ல அனுபவம் கொண்டவர்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினராக சுப்பையா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார் .தகுதி உள்ளவர்கள்தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.