தாயாரின் 100வது பிறந்தநாள்: நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி

18 June 2022

தனது தாயாரின் 100வது பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

வதோதரா, பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ,16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.1.38 லட்சம் வீடுகளை பிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார். பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், இன்று தனது வாழ்வின் 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் தனது தாயாரான ஹீராபென்னின் பிறந்தநாளையொட்டி, காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். இதனிடையே, ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா தெரிவித்திருந்தார்.