வெள்ளிப்பதக்கம் வென்ற பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

13 September 2021

வெள்ளிப்பதக்கம் வென்ற பதக்க நாயகன் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்ற மாரியப்பன், இந்த முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தொடர்ந்து இரண்டு முறை பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாரியப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வெள்ளிப்பதக்கம் வென்ற பின்னர் மாரியப்பன் சொந்த ஊரான சேலம் மாவட்டம்  பெரியவடகம்பட்டிக்கு வருகை புரிந்தார்.  அவருக்கு ஊர் எல்லைப் பகுதியான தீவட்டிப்பட்டியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ஊர்மக்கள்  மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். 
தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மலர்க்கொத்து கொடுத்தும், மலர்க்கிரீடம் அணிவித்தும் வரவேற்றார். இதனையடுத்து மாரியப்பனை தோளில் சுமந்தபடி  ஊர்மக்கள் தூக்கிச்சென்று, திறந்தவெளி வாகனத்தில்  ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதனிடையே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாரியப்பன், இந்த முறை தவறிவிட்ட தங்கப்பதக்கத்தை அடுத்தமுறை நிச்சயம் வெல்வேன் என்று உறுதிபட தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ஊர்மக்கள் அளித்த வரவேற்பு காரணமாக  அப்பகுதி  திருவிழாகோலம் பூண்டிருந்தது.


சேலம்.
எஸ் கே சுரேஷ் பாபு.