திருவாரூர் மாவட்டத்தில் 32,800 எக்டேர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் - நிபந்தனையின்றி கடன் வழங்க கோரிக்கை

10 June 2021


திருவாரூர் மாவட்டத்தில் 32,800 எக்டேர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் ஈடுபட்டு வருகின்றனர். நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்தால் தான் சாகுபடி என்ற நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீரை கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யப்படும் நிலையில் தண்ணீர் பிரச்சினையால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டு வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் தீவிரமாக குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இதனையொட்டி டிராக்டர் மூலம் நிலத்தை புழுதி அடித்து விதைப்புக்கு தயாராகி வருகின்றனர். மேலும் லேசர் கருவிகள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 32 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வாய்ப்பு உள்ள பகுதிகளில் குறுகிய கால பயிர்களை கொண்டு நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 10,214 எக்டேர் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில் நேரடி விதைப்பு 2,062 எக்டேர், திருத்திய நெல்சாகுபடி 6,468 எக்டேர், இயல்பான சாகுபடி 1,684 எக்டேர் பரப்பளவிலும் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:- குறுவை சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில் குறுகிய கால தரமான விதைகள், உரங்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கிட வேண்டும். கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித நிபந்தனையின்றி பயிர் கடன் வழங்கிட வேண்டும். மேலும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிருபர் மீனா திருவாரூர்