கீழடியில் கிடைத்த அதிசய பொருட்கள்!!

23 July 2021


கீழடி அகழாய்வில் பண்டைய காலத்தில் பயன்படுத்திய புகைபிடிக்கும் கருவி, விலங்கு பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  


தோண்ட தோண்ட புதையல் என்பதை போன்று, தோண்ட தோண்ட தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறிய செய்து வருகிறது கீழடி...

சிவகங்கை மாவட்டம் கீழடி அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அகரம் தளத்தில் மட்டும் 8 குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் துறை அதிகாரிகள் அகழ்வாராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதுவரை உறைகிணறு, சிறிய பானைகள், நத்தை கூடுகள், தலையலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அகரம் பகுதியில் புகை பிடிக்கும் கருவி மற்றும் சிறிய உருவம் கொண்ட விலங்கின் பொம்மையை கண்டறிந்துள்ளனர்.

 பார்ப்பதற்கு வராகி போன்று காட்சியளிப்பதாகவும், ஆய்வுக்கு உட்படுத்தி, எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதனிடையே அகழாய்வுப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி நமது நாகரீகத்தின் தொட்டில் என தொடர்ந்து நிரூபித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

அகழாய்வுகளில்் கிடைக்கும் பொருட்கள் ஆராய்ச்சிக்கு அனுப்பி பத்திரப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், இனிவரும் காலங்களிலும் கீழடியில் பல தொன்மையான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.