"கார்த்திகை தீபம் வரலாறு"

18 November 2021

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை மாதம்:

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

சூடாமணி நிகண்டில் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்.

*தெறுகால்,
*தேள்,
*விருச்சிகம்

கார்த்திகை நாள்:

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர்.
அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள்.

*அங்கி
*அளக்கர்
*அளகு
*அறுவாய்
*ஆரல்
*இறால்
*எரிநாள்
*நாவிதன்

கார்த்திகை விழா:

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
ஐதீகம் :

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

திருவண்ணாமலை கார்த்திகை விளக்கு :

காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை:

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

 வீடுகளை அலங்கரிக்கும் முறை :

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரம்:

       கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

சங்கநூல்களில் கார்த்திகை :

கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.
கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்

சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின்

கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக்

கோல்கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்

வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்

கையற வந்த பொழுதோடு மெய்சேர்த்து,

அவல நெஞ்சினம் பெயரஇ உயர்திரை

நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன்

ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே…..

கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது. அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.

புராணக் கதைகள்:

முதல் கதை:
      கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ள சான்றினைத்தான் முக்கியச் சான்றாக இந்த புராண கர்த்தாக்கள் காட்டுகிறார்கள். அதன்படி, தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது  அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும்,  அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

இந்தக் கதையில் தமது நோக்கத்தை எளிதில் அடைந்து விடுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார், அதாவது பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் மட்டும்தான் தங்களில் யார் பெரியவன் என்ற போட்டி, சிவன் அந்தப் போட்டியில் இல்லை என்பதை முன்பே அறிவிப்பதின் மூலம் அவரின் மேலான நிலையை முதலிலேயே நிறுவிவிடுகிறார், அடுத்து அந்த இருவருக்கும் சிவன்தான் சோதனை வைக்கிறார் அதன் மூலம் இருவருக்கும் நடுவில் அவர் மட்டும்தான் இருக்கிறார், தமது மேண்மையை நிலைநிறுத்துகிறார். கடைசியாக இருவரும் சிவனிடம் சரணடைந்து அவரின் மேன்மையை ஏற்றுக் கொண்டு மக்களுக்கும் அதை வெளிபடுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர், அதை சிவனும் நிறைவேற்றுகிறார், கடைசியாக சிவனே மேலானவர் என்று முடிக்கிறார் சிவாச்சாரியார். தமது நோக்கத்தில் வெல்கிறார். பிரம்மனும் விஷ்ணுவும் ஏற்றுக் கொண்ட பிறகு சாமன்யரான உங்களுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது. என்ற மறைமுகமான எச்சரிக்கையும் சிவாச்சாரியார் விடுக்கிறார்.

இரண்டாம் கதை:
   இதையும் கந்தப் புராணத்திலே காணலாம். கதைபடி.. தங்களை வதைக்கும் சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும்போது மானாகவும் யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது, இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப் படுகிறார்கள். இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.  இந்த கார்த்திகேயனுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை தனியாக விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். ஏனெனில் புராணக் கதைப்படி இருவரும் வெவ்வேறானவர்கள், ஆனால் இந்துக்களின் நம்பிக்கைப்படி இருவரும் ஒருவர்தான்.

மூன்றாவது கதை:
      சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும்  சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள்  என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

கார்த்திகை தீபம் இந்த மூன்று கதைகளில் எது நம்பக்கூடியக் கதை. இக்கதைகளின் படி கார்த்திகை நாள் சிவனுக்கு உரியதா? கார்த்திகேயனுக்கு உரியதா? அக்னி பகவானுக்கு உரியதா? கார்த்திகைப் பெண்களுக்கு உரியதா? ஆறு ரிஷிகளின் மனைவிகளுக்கு உரியதா, அல்லது முருகனுக்கு உரியதா? இதில் யாருக்கு உரியதாக இருந்தாலும் சொல்லப்பட்ட கதைகளில் என்ன அறிவியல் உண்மை இருக்கும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையிலான போட்டியை சுட்டிக்காட்டி அவர்கள் மனம் மாறுவதை விளக்கும்போது அவர்களது அகங்காரத்தை சிவன் அடக்கினார் எனவே கார்த்திகையின்போது அகங்காரத்தை விட்டொழிக்கலாம் என்று புராணவாதிகள் விளக்கம். 

    அனைவருக்கும் வாழ்த்துகள்..

                           அன்புடன்,
                       பாலமுருகன்.M.A, TPT, PGD.C.A,PGD.YOGA ,  PGD.A.E,  D.E.M,    C.G.T.                                                                                                                                                                                      கல்வெட்டு மற்றும்  தொல்லியல் ஆர்வலர்.