சசிகலா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

07 September 2021

சசிகலா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சிறையில் அவருக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்ட வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக மாநில தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறையில் இருந் தபோது லஞ்சம் பெற்று அவர்களுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த கல்வி ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர் கீதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதியின் உத்தரவால் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கடந்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்காக காத்திருப்பதாகவும் வாதிட்டார்.

குற்றச்சாட்டு எழுந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி பெறாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி 30 நாட்கள் கால அவகாசம் தருவதாகவும் அதற்குள் உரிய அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதில் தவறு ஏற்பட்டால் கர்நாடக முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.