மதுரை மண்ணில் வெற்றிப் பெற்ற கக்கன்

23 December 2021

இந்தியாவின் விடுதலை நெருங்கியபோது, 1946 ஜனவரியில் அமைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டசபையின் உறுப்பினராகப் பதவியேற்றார் கக்கன். 

இந்தியா குடியரசு ஆன பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கக்கன். 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன், வெற்றிபெற்று பொதுப் பணித்துறை அமைச்சரானார்.

அதற்குப் பிறகு 1962ல் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கக்கன், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் அதில் பலர் இறந்ததும் கக்கனின் பொது வாழ்வில் மிகப் பெரிய விமர்சனத்திற்குரிய நிகழ்வாக அமைந்ததது. 

இதற்குப் பிறகு 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டாலும் தி.மு.க. வேட்பாளர் ஓ.பி. ராமனிடம் தோல்வியடைந்தார் கக்கன்.அ. வைத்தியநாதருக்குப் பிறகு, காமராஜரையே தலைவராக ஏற்றுக்கொண்ட கக்கன், கடைசிவரை அவரது தலைமையின் கீழேயே செயல்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரசாகவும் இந்திரா காங்கிரசாகவும் பிரிந்தபோது, கக்கன் ஸ்தாபன காங்கிரசிலேயே இருந்தார்.