காணல் நீராகிப் போன பத்திரிகையாளர் நலவாரியம் ! டி.எஸ்.ஆர்.சுபாஷ் மாநில தலைவர் TUJ...
06 November 2022
காணல் நீராகிப் போன பத்திரிகையாளர் நலவாரியம் ! டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர் TUJ...
முதலாளிகளின் கூடாரமாக விளங்க ஒரு நலவாரியம் தேவையா ?
90 % தாலுகா செய்தியாளர்களுக்கு எந்த உதவிகளுமே இதில் கிடைக்க வாய்ப்பு இல்லை !
அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் ஒரே குடையின் கீழ் இணைந்து இதை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் !
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் " இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது !
யாருக்கும் பயன் தராத நலவாரியத்தை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் !
90 சதவீத பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் பத்திரிகையாளர் நல வாரியம்...
உடடினயாக விதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது...
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை பார்க்கும்போது ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேலான பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேரமுடியாது என்பது தெளிவாக தெரிகிறது.
விண்ணப்பப் படிவத்தில் முதல் கேள்வியாக அரசு அங்கீகார அடையாள அட்டை எண் அல்லது அரசு செய்தியாளர் அட்டை எண் அல்லது இலவச பேருந்து பயண அட்டை எண் கேட்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகார அட்டைகள் ஒரு செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. அதேபோல் வளர்ந்துவரும் எதிர்கால ஊடகமான டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு இவை எதுவும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தமான உண்மை.
பத்திரிகை அல்லது தொலைகாட்சி என எந்த ஊடகமாக இருந்தாலும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு சுமார் 10 அரசு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனத்தில் 200 பேர் வேலை செய்தாலும், 300 பேர் வேலை செய்தாலும், 10 அட்டைகளுக்கு மேல் வழங்கப்படுவதில்லை. இந்த 10 அடையாள அட்டைகள் அனைத்தும் அதில் பணியாற்றும் தகுதியான, அதாவது களத்தில் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்கலைஞர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக அந்த நிறுவனத்தின் முதலாளி தொடங்கி தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பாதிக்கும் மேற்பட்ட அட்டைகளை பெற்றுக்கொண்டு, களத்திற்கு செல்லும் செய்தியாளர்களில் 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே அங்கீகார அட்டைகள் வழங்கப்படுகின்றன. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இதே நிலைதான்.
இந்நிலையில், அதே நிறுவனத்தில் பிற பிரிவுகளில் பணியாற்றும் எந்த ஒரு பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் துணை ஆசிரியர்கள், பிழை திருத்துபவர்கள், கார்டூனிஸ்டுகள் மற்றும் செய்தி உருவாக்கத்திற்கு துணைபுரியும் இன்னும் பல துறைகளில் பணியாற்றுபவர்களை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம் (1955) பத்திரிகையாளர்கள் என்று அங்கீகரித்துள்ளது. ஆனால், இவர்கள் அரசு அங்கீகார அட்டை என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
காட்சி ஊடகத்தில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், துணை ஆசிரியர்கள், விஸ்வல் எடிட்டர்கள், வரைகலைஞர்கள், செய்தி ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் செய்தி தயாரிப்பாளர்களுக்கு அந்த 10 அட்டைகளில் ஒரு அட்டை கூட ஒதுக்கப்படுவதில்லை. டிஜிட்டல் ஊடகங்களுக்கோ ஒரு அட்டை கூட வழங்கப்படுதில்லை.
அதேபோல், மாவட்ட தலைநகரங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களில், தொலைகாட்சியாக இருந்தாலும், பத்திரிகைகளாக இருந்தாலும், ஒரு நிறுவனத்திற்கு இரண்டு பஸ் பாஸ்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைக்கு இந்த பஸ் பாஸ் மட்டுமே மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அவர்கள் பத்திரிகையளார்கள் என்பதற்கான அங்கீகாரமாக கருதப்படுகிறது. அந்த அங்கீகாரமும் தாலுகாகளில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு கிடைப்பதில்லை.
ஆகவே, ஒரு செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் 10 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே தற்போது அரசு வகுத்துள்ள விதிமுறையின் அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தகுதியானவர்கள் என்பது தெளிவாகிறது. இந்த 10 சதவீத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளிகளும் மற்றும் தலைமை செய்தி ஆசிரியர், இணை ஆசிரியர், முதன்மை ஆசிரியர் அரசியல் பிரிவு ஆசிரியர், தலைமை செய்தியாளர், தலைமை புகைப்படக் கலைஞர், தலைமை ஒளிப்பதிவாளர் என லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களும் பாதிக்கும் மேல் உள்ளனர். இவர்களை நல வாரியத்தில் சேர்த்து, அவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவா பத்திரிகையாளர்கள் நலவாரியம் தொடங்கப்பட்டது? என்ற கேள்வி தவிர்க்க இயலாதது.
ஒட்டுமொத்ததில் பார்க்கும்போது,
1)நிரந்தரமான சம்பளம் இல்லாமலும், வருங்கால வைப்பு நிதி (Provident fund), தொழிலாளர்களுக்கான அரசு ஈட்டுறுதி திட்டம் (ESI), ஒரு சில நிறுவனங்கள் வழங்கும் தொழிலாளர் மருத்துவக் காப்பீடு போன்ற எந்த ஒரு சமூக நலத்திட்டங்களிலும் பயன்பெற முடியாத நிலையிலும் களத்தில் பணியாற்றும் தாலுகா செய்தியாளர்கள் பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முடியாது.
2)மாவட்ட தலைநகரங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களில் ஒரு நிறுவனத்தில் இரண்டு பேரை தவிர்த்து மற்றவர்கள் பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முடியாது. தாலுகா செய்தியாளர்களைப் போலவே, இவர்களில் பெரும்பான்மையினருக்கு சமூக நலத்திட்டங்கள் (PF, ESI) சென்று சேர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3)சென்னையை பொறுத்தவரை, ஒரு சில பெரிய நிறுவனங்களை தவிர்த்து, பெரும்பாலான நிறுவனங்கள், மிகக்குறைந்த சம்பளத்தில் பத்திரிகையாளர்களை பணிக்கு அமர்த்துகின்றன. இதில் பெரும்பான்மையானவர்கள் வேலை தேடி பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தவர்கள். இவர்கள் பத்திரிகை நிறுவனங்களில் செய்தியாளர்களாக மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுகிறார்கள். மிகக்குறைந்த சம்பளத்தை பெறும் இவர்கள், வாழ்வதற்கான செலவு தொடர்ந்து பல மடங்கு உயர்ந்துவரும் சென்னையில், அன்றாட செலவுக்கும், சொந்த ஊரில் இருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்புவதற்கும் படும் துன்பத்தை சொல்லில் விவரிக்க முடியாது. தற்போது அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் இவர்களில் 99 சதவீதத்தினர் பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முடியாது.
பொதுவாக நலவாரியம் என்பது, அந்த துறையில் பணியாற்றும் நலிந்தவர்களை கை தூக்கிவிடுவதற்காக, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும். ஆகவே, அதில் உதவித்திட்டங்களை பெறுவதற்கு தகுதியான நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள பத்திரிகையாளர் நல வாரியம் அந்த வரையறைக்கு எதிராக உறுப்பினர் சேர்க்கைக்கான விதிகளை வகுத்துள்ளது பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, பத்திரிகையாளர் நலவாரியத்தில் அரசு அங்கீகார அட்டை, அரசு செய்தியாளர் அங்கீகார அட்டை மற்றும் பஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உறுப்பினராக சேரமுடியும் என்ற நிலையை மாற்றி, தகுதியான அனைத்து பத்திரிகையாளர்களும் உறுப்பினராகும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைபயனான டிஜிட்டல் ஊடகம்தான் இனி எதிர்காலம் என்று மாறிவரும் சூழலில், அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களையும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
இதுதொடர்பாக அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பிற துறைகளின் நலவாரியத் தலைவர்களிடம் உரிய கருத்துகளைப் பெற்று தகுதியான அனைத்துப் பத்திரிகையாளர்களும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினராவதை உறுதி செய்து, திருத்தப்பட்ட விதியை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இதே போல அனைத்து சங்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் !
கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப் எடிட்டர்