பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது ஜியோ

20 January 2022

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ நிறுவனம் நிரந்தர இணைப்பு மூலமான பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஜியோ நிறுவனம் பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையை 2019 செப்டம்பரில் தொடங்கியது. 2 ஆண்டுகளே ஆன நிலையில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறு வனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறு வனத்தின் வாடிக்கையாளர் எண் ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையிலான சேவையை வழங்குகிறது.இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர பயனாளர்களின் அறிக்கையில், அக்டோபரில் 41.60 லட்சமாக இருந்த ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பரில் 43.40 லட்சமாக உயர்ந் துள்ளது.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அக்டோபரில் 47.20 லட்சமாக இருந்தது.


இது நவம்பர் மாதத்தில் 42 லட்சமாக சரிந்துவிட்டது.பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 40 லட்சமாக உள்ளது.2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் வசமிருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 86 லட்சமாகும். 2 ஆண்டுகளில் அதாவது 2021-ல் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வயர் மூலமான பிராட்பேண்ட் சேவை 70% அதிகரித்துள்ளது. 2021 நவம்பரில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை இது பெற்றிருந்தது. இதே அளவில் இது வளரும்பட்சத்தில் விரைவிலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்தை பார்தி ஏர்டெல்லும் விஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.