காரணிகளால் காரியம் சீராகும்!

03 December 2021

காரணிகளால் காரியம் ஆற்றினால் ஆரண்யம் கடப்பதும், தரணியை ஆள்வதும் அரிதல்ல.

நூஹ் நபி அவர்களின் ஏக இறை கொள்கையை ஏற்றவர்களைப் பிரளயத்திலிருந்து காப்பாற்றியதைக் கண்ணிய குர் ஆனின் 23-27 ஆவது வசனம் விவரிக்கிறது.நூஹ் நபி அவர்களின் நற்போதனையை ஏற்காது பிற்போக்கில் பேதுற்று, பெரும் பிழை புரிந்து வாழ்ந்த மக்களைச் சூழும் ஆபத்திலிருந்து, ஏற்ற மக்களைக் காப்பாற்றும் காரணியாம் கப்பலைக் கட்ட அல்லாஹ் நூஹ் நபி அவர்களுக்குக் கட்டளை இட்டதைச் சுட்டி காட்டுகிறது இந்த வசனம். நூஹ் நபி காலத்தில்தான் உலகில் முதன் முதலாக கப்பல் கட்டப்பட்டது.ஏக இறை கொள்கையை ஏற்று நேர்வழியில் வாழ்ந்த மக்களுக்குப் பயன்படும் உயிரினங்களை ஆண், பெண் இணையாக கப்பலில் ஏற்ற கட்டளை இட்டான் காவலன் அல்லாஹ். காரணிகள் தயார் ஆயின. வெள்ள பிரளயம் ஏற்பட்டதும், பேராபத்திலிருந்து பேராளன் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வாழ்ந்தோர்மீண்டனர்.துல்கர்னைனுக்கு ஆதிக்கம் வளமிக்க வசதி வாய்ப்புகள் வழங்கி, ஒவ்வொரு பொருளையும் தயாரிக்கும் வழியையும் மொழிந்ததைப் புகல்கிறது 18- 84, 85 ஆவது வசனங்கள்.ஒருமுறை ஒரு சமுதாய மக்கள் அவர்கள் வாழும் பகுதியில் புகுந்து தொல்லை கொடுக்கும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் இடமிருந்து காப்பாற்ற அரண் அமைத்து தரும்படி துல்கர்னைனிடம் வேண்டினர்.அதற்காக ஒரு தொகையைச் சேகரித்து தர முன்வந்தனர். பொருளைப் புறக்கணித்து அப்பகுதி மக்களின் உழைப்பையே காரணியாக்கி, உறுதியான அரணை அமைத்து கொடுத்தார் துல்கர்னைன். இதனை 18-95 ஆவது வசனம் விளக்குகிறது.பயன் தருபவற்றில் பற்று வைத்து அல்லாஹ்விடம் உதவி கேட்க உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்தது முஸ்லிம் நூல் 2064எண்ணில் பதிவாகி உள்ளது.அல்லாஹ்வின் அருளை இறைஞ்சி வீரியம் பேசாது காரணிகளைக் கொண்டு காரியம் ஆற்றி தரணி போற்ற வாழ்வோம்.