ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; பிரான்ஸ், ஸ்பெயினில் கடும் வெப்பம்

18 June 2022

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையை எதிர்கொள்கின்றன.

பாரிஸ், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. நேற்று பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. இன்று பதிவாகும் வெப்பம், உச்சபட்சமாக இருக்கும் என்றும் பருவநிலை மாற்றத்தால் இத்தகைய நிகழ்வுகள் வழக்கத்தை விட முன்னதாகவே தாக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இன்று 42 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக, ஸ்பெயினின் வடமேற்கு சியரா டி லா குலேப்ரா பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 9,000 ஹெக்டேர் (22,240 ஏக்கர்) நிலம் எரிந்து நாசமாயின. இதனால் 200 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஸ்பெயினில் 35 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. அதேபோல, மத்திய ஸ்பெயினில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட மக்கள், கடுமையான காட்டுத் தீயால் வெளியேற்றப்பட்டனர். பல பகுதிகளில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தாலியில், வரலாறு காணாத வறட்சி அச்சுறுத்துவதால், லோம்பார்டி பகுதியில் அவசரகால நிலையை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 செல்சியஸ் வெப்பநிலையை எட்டியதன் மூலம் பிரிட்டனில், இந்த ஆண்டின் வெப்பமான நாளாக நேற்று பதிவானது. அங்கு தொடர்ந்து 3 தினங்களாக, 28 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.

பிரான்சில் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குளிர்காலத்தை விட கோடையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தன்னார்வலர் ஒருவர் தெரிவித்தார். "இது 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்சில் பதிவான அதீத வெப்ப அலையாகும்" என்று மெட்டியோ பிரான்ஸ் வானிலை ஆராய்ச்சி மையத்தின் காலநிலை நிபுணரான பேத்யூ சோரெல் கூறினார். அங்குள்ள கட்டிடங்களை குளிர்விக்க தண்ணீர் தெளிக்கப்படுகிறது. திறந்தவெளியில் அல்லது குளிர்சாதன வசதியில்லாத இடங்களில் வைத்து நடைபெறும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாரிஸ் மாநகரில், குறைந்த அளவு மாசுபடுத்தும் வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரித்தது காரணமாக, மேலும் மின் நுகர்வு அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள உலக வானிலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிளேர் நுல்லிஸ் கூறுகையில், "வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து, புவி வெப்பமடைவதை தூண்டுவதால், காலநிலை மாற்றத்தின் விளைவாக, வெப்ப அலைகள் முன்னதாகவே தொடங்குகின்றன" என்று அவர் தெரிவித்தார். கடும் வெப்பததை சமாளிக்க பிரான்சில், முதியோர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கு 2003ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெப்ப அலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.