டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம் அனுமதி!

21 July 2021


புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதியளித்துள்ளது.


வேளாண் விளைபொருள் வர்தகம் மற்றும் வணிகம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நாளை (ஜூலை 22) தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது.




இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கான எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை தெரிவித்து வந்தது. ஆனால், டெல்லி அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை வாரியம், "விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் காலை 11முதல் மாலை 5 மணி வரை நாளை (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 9 வரை போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.” என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.