எவர் கிவன் சரக்கு கப்பலால் ரூ.73 ஆயிரம் கோடியை இழந்த எகிப்து

01 April 2021

ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவா் கிரீன்' என்ற சரக்கு கப்பல், கடந்த 23-ம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. புழுதி புயல் காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்கே திரும்பி தரைதட்டி நின்றதாக கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது. இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.


கச்சா எண்ணெய், கால்நடைகள் உள்ளிட்டவற்றுடன் 360-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கால்வாயின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் நாளொன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.‌

இதனிடையே சகதியை அகற்றும் ராட்சத எந்திரங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இழுவை படகுகளை கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக இரவுப்பகலாக நடந்து வந்தன. சரியாக ஒரு வாரம் நடந்த தீவிர மீட்பு பணியின் பலனாக கடந்த திங்கட்கிழமை எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாலையில் அந்த கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.


’எவர் கிரீன்’ கப்பல் தற்போது சூயஸ் கால்வாயின் கிரேட் பிட்டர் லேக் என்ற பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை முடியும் வரை கப்பல் அங்கே தான் இருக்கும் என சூயஸ் கால்வாய் நிர்வாகத் தலைவர் ஒசாமா ரபியா கூறினார்

எவர் கிவன் தரைதட்டி நின்ற முதல் நாளிலிருந்து கப்பலை மீட்க நாங்கள் செலவழித்த மொத்த பணத்தையும் தொடர்ந்து கணக்கிட்டு வருகிறோம்.மொத்த செலவு கிட்டதட்ட 100 கோடி டாலர்  வரும் என ஒசாமா ரபியா கூறினார்.முன்னதாக, கால்வாயில் எற்பட்ட போக்குவரத்து தடையால் எகிப்து அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 1.4  கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஒசாமா ரபியா குறிப்பிட்டார்.