திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

19 June 2022

பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நான் இந்த இயக்கத்தில் தொண்டன் என்ற உணர்வு, பெருமையைப் பெற்றிருக்கின்ற இயக்கம்.

வாழ்ந்த காலம் வரை இம்மியளவும் தான் கொண்ட கொள்கையில் இருந்து பிசகாமல் வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைத்தான் நமது மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே பட்டி தொட்டி எல்லாம் அவரது புகழை பறைசாற்றும் விதமாக இந்த விழாவை இன்று எடுத்துக்கொண்டு இருக்கின்றோம். கலைஞர் என்ற நான்கு எழுத்து தான் இன்றைக்கு நம்முடைய தலை எழுத்தாக வாழ வைக்கின்ற எழுத்தாக இருந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த ஆட்சி என்பது அது பெண்களுக்கான ஆட்சிதான். தொடர்ந்து பெண்கள் முன்னேற்றம், மாணவர்கள் முன்னேற்றம் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கக்கூடிய பல திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் நமது முதல்வர். இந்தியாவிலேயே விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது திமுக ஆட்சிதான் என்பதை நாம் பெருமையாக கருதவேண்டும்” என்று பேசினார்.