ஆசிரியர்களை நேரடி நியமனம்: வயது வரம்பை 40 லிருந்து 45 ஆக உயர்த்தி அரசானண வெளியீடு

19 October 2021

ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய விதிகளை மறுவெளியீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 என்றும், இதர பிரிவினர்களுக்கு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், மற்றும் கணினி பயிற்றுநர்கள் ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப பொதுப் பிரிவினருக்கு 40 வயது எனவும், இதர பிரிவினருக்கு 45 வயது எனதும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மனிதவள மேலாண்மைத் துறை அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்ய வயது உச்ச வரம்பு தற்போது 30ல் இருந்து 32ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. எனவே, ஆசிரியர் பணி தேடுபவர்களின் நலனை கருத்தில் கொண்டு வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45 வயதில் இருந்து 50 வயதாகவும் நிர்ணயித்து ஆணை வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.