அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ்.பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

27 August 2021

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ், குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்நாட்டில், முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 303 குழந்தைகள் வீதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபுளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் 15 சிறுவர்கள் கொரோனா பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெறுவதாகவும், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவர்கள், மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 71 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்ற மாதம் 87 பேர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் 49 சிறுவர்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 2 மாதங்களாக சிறுவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்புக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற வகை கொரோனாவை விட, டெல்டா வகை மிகவும் வீரியமிகுந்ததாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிகள் திறப்பும் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான காரணமாக கூறப்படுகிறது