கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு

06 April 2021

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது.

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 ஊரடங்கை அமல்படுத்தினால் வணிக நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நாம் வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது. அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். பிரதமர் மோடி நேற்று (நேற்று முன்தினம்) மராட்டியம், கர்நாடகம் உள்பட 8 மாநில முதல்-மந்திரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, வைரஸ் தடுப்பு ஆலோசனைகளை வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா தடுப்பு ஆலோசனை நிபுணர் குழு ஆகியோருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். முதல்-மந்திரி எடியூரப்பா ஊரடங்கை அமல்படுத்த மனிதநேய அடிப்படையில் அனுமதி வழங்கவில்லை.

 திரைத்துறையினர் வந்து முன்பதிவு செய்தவர்களை படம் பார்க்க 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கேட்டனர். அதனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதே போல் உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை அந்தந்த துறை தலைவரே அமல்படுத்த வேண்டும். சில இடங்களில் இந்த வழிமுறைகள் சரியான முறையில் செயல்படுத்தவில்லை என்று புகார்கள் வருகின்றன. இதுகுறித்து தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தப்படும்.

கொரோனா தடுப்பு ஆலோசனை நிபுணர் குழு, மே மாதம் இறுதி வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த குழு வழங்கிய சிபாரிசுகளை முதல்-மந்திரியிடம் வழங்கியுள்ளோம். கொரோனா விஷயத்தில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா பரவல் குறையுமே தவிர அது முழுமையாக நம்மை விட்டு போகாது. இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
கொரோனா 2-வது அலை வருகிற மே மாதம் வரை இருக்கும் என்பதால் அதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 20 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பவுரிங், விக்டோரியா மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் மற்ற நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் இன்று (அதாவது நேற்று) ஆலோசனை நடத்த உள்ளேன். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படுக்கைகளை ஒதுக்கும்படி தனியார் மருத்துவமனைகளை கேட்டுள்ளோம்.

அதனால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை இல்லை. மத்திய அரசின் சுகாதாரத்துறை, மேலும் 15 லட்சம் டோஸ் தடுப்பூசியை அனுப்பி வைத்துள்ளது. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.