கோவையில் இன்டெக் - 2022 தொழில் கண்காட்சி நிறைவு : 6 நாட்களில் ரூ.1,200 கோடி வர்த்தகம்

15 June 2022

கோவையில் ஆறு நாட்களாக நடந்த, 'இன்டெக் - 2022' தொழில் கண்காட்சியில், 1,200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

கோவை 'கொடிசியா' கண்காட்சி அரங்கில், சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி இன்டெக் - 2022 கடந்த 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.கண்காட்சியில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் 488 தொழில் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

தொழில் வளர்ச்சி'கொடிசியா' தலைவர் ரமேஷ்பாபு கூறியதாவது:
மூன்றாண்டு இடைவெளிக்குப்பின் நடந்த இந்த தொழிற்கண்காட்சியில், 1,200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.அரங்குகள் அமைத்தவர்களுக்கு, 100 சதவீதம் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
அடுத்த ஆண்டுக்கான கண்காட்சிக்கு தற்போதே, 30 சதவீத அரங்குகள் முன்பதிவாகிவிட்டன. லேசர் மற்றும் ரொபோட்டிக் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பான்மையான அரங்குகள் அமைத்திருந்தன. மூன்று ஆண்டு இடைவெளி, வர்த்தகத்தையும் தொழில் வளர்ச்சியையும் பல மடங்காக பெருக்கிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.


ரொபோட்டிக் இயந்திரங்கள்தைவான், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வந்த லேசர் மற்றும் ரொபோட்டிக் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

டெல்டா ரொபோதைவான் நாட்டு தயாரிப்பான டெல்டா நிறுவனத்தின் ரொபோட்டிக் இயந்திரம், சி.என்.சி. இயந்திரத்துடன் இணைத்து, முழு செயல்பாட்டையும் பார்வையாளர்கள் பார்வையிடும் வகையில் வைக்கப்பட்டிருந்தது.


ஒரு ஜாப் ஆர்டரை குறிப்பிட்ட சில வினாடிகளில் எப்படி ரொபோட்டிக் இயந்திரம் நிறைவு செய்கிறது என்பதை பார்வையாளர்கள் முழுமையாக பார்வையிட்டனர். உணவு தயாரிப்பு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் ரோபோக்களில் உள்ள கிரிப்பர்களை நம் தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.குறைந்தபட்சம் அரை மீட்டரில் இருந்து, 2 மீட்டர் வரையும், 40 கிலோவில் இருந்து 80 கிலோ வரையும் எடை கொண்டதாக ரொபோட்டிக் இயந்திரங்கள் உள்ளன.

மெகா கியர் வீல்கள்மின் உற்பத்தி செய்யும் மெகா காற்றாலைகளுக்கான இயந்திரங்களில் பொருத்தப்படும் கியர் வீல்கள், சிமென்ட் ஆலைகளில் உள்ள இயந்திரங்களுக்கான கியர் வீல்கள், மீன்பிடி படகுகளுக்கான கியர் பாக்ஸ்களை தயாரித்து வருகிறது, சாந்திகியர் நிறுவனம். சிறிய கியர் வீல்களில் இருந்து பிரமாண்டமான வீல்கள் வரை அவர்களது தயாரிப்புகளை வரிசைப்படுத்தியிருந்தது.

ஆபத்தை தவிர்க்கும் பிரேக்'மல்டிலெவல் கார்பார்க்கிங்'களில், கார்களை ஹைட்ராலிக் முறையில் அதிக உயரத்தில் நிறுத்தம் செய்கின்றனர். இதற்கு, 20 எச்.பி., திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துகின்றனர். கார்களை மேலே தாங்கி செல்லும்போது மின்தடை ஏற்பட்டால், அவை திரும்ப தரைதளத்துக்கு வந்து சேரும்.அப்போது விபத்து ஏற்படலாம். அதை தடுக்க பிரேக் மோட்டார்களை பயன்படுத்தலாம்.அதேபோல், தொழிற்சாலை விபத்தை தடுக்கவும் இவ்வகை மோட்டார்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர செப்டிக்டேங் கிளீனிங், கட்டர் சீவேஜ், கட்டர் பம்ப், பிரஷர் பூஸ்டிங் பம்ப்களை தயாரிக்கிறது கோவை நேருநகரில் உள்ள தரணிபம்ப்ஸ் மற்றும் மோட்டார்ஸ் நிறுவனம்.

மருத்துவ துறை ரோபோ'பயாப்சி' பரிசோதனைக்கு உடலின் சிறிய சதைப்பகுதியை எடுக்கும் பணியை ரோபோ இயந்திரம் மிகத்துல்லியமாக செய்கிறது. இதை கோவை நீலம்பூரில் உள்ள, 'ஆத்ரே ஹெல்த் டெக்' நிறுவனம் தயாரித்துள்ளது. இருதயம், வயிறு, கல்லீரல், புராஸ்டேட் உறுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் ஸ்கேன் செய்து காணொலி வாயிலாக டாக்டர்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வசதியை கொண்டுள்ளது.

ரோபோ டிரில் காம்பேக்ட் வெர்டிகல் இயந்திரம்ஜப்பான் தயாரிப்பான இந்த ரொபோட்டிக் இயந்திரம், மோட்டார்களுக்கான பாகங்களை தயாரிக்கும் பணிகளை செய்கிறது. ஒரே நேரத்தில் ஐந்து முதல், 10 வரையிலான இயந்திர உதிரி பாகங்களை தயாரித்து, அதை பொருத்தும் பணிகளை மேற்கொள்ளும். 10 ஆண்டுகள் வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாமலேயே தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் உள்ளது. மில்லிங், டிரில்லிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் ஒரே இயந்திரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.

மின் அளவீட்டுக்கருவிஅமெரிக்க நிறுவனமான, 'ப்ளூக்கி' அதிக வெப்பத்தில் பயன்படுத்தப்படும் தெர்மோமீட்டர்களையும், மின்அளவுக்கு மல்டி மற்றும் கிளாம் மீட்டர்களையும் நவீன தொழில்நுட்பத்தோடு கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தது. ஏராளமான தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.