மத்திய அரசா? ஒன்றிய அரசா?

04 June 2021

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, மோடியின் வாழ்த்துக்கு நன்றி சொல்லியது முதல், அரசு அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் "ஒன்றிய அரசு” என்றே மத்திய அரசை புதிய சொல்லாடல் கொண்டு குறிப்பிடுகிறது திமுக.


கிரிக்கெட்டில் ஐபிஎல் போலத்தான், இன்றைய இந்திய அரசியலும் உள்ளது. அதில் சென்னை அணி, கொல்கத்தா அணி, மும்பை என்பதைப் போல, இங்கும் தமிழ்நாடு திமுக அணி, மேற்குவங்கம் திரிணாமுல் அணி, கேரளா கம்யூனிஸ்ட் அணி என முன்னணியில் இருக்கின்றன. இரண்டுமே இந்தியாவுக்குள் நடக்கும் உள்விளையாட்டுகள் தான் என்றாலும் கூட, அரசியல் விளையாட்டில் ஒரு சிறு வித்தியாசம் உண்டு, இந்த அணிகளுக்கெல்லாம் ஒரே ஆப்போனண்ட் மட்டும் தான், அது மத்தியில் ஆளும் பாஜக அணி.

இப்போதைய போட்டி, தமிழ்நாட்டின் திமுக அணிக்கும், மத்திய பாஜக அணிக்கும். `ஒன்றிய அரசு’ என்பதில் தொடங்குகிறது போட்டி. தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, மோடியின் வாழ்த்துக்கு நன்றி சொல்லியது முதல், அரசு அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் "ஒன்றிய அரசு” என்றே மத்திய அரசை புதிய சொல்லாடல் கொண்டு குறிப்பிடுகிறது திமுக. அதன் முன்னணி அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் அப்படியே குறிப்பிடுகின்றனர். இதுதான் தற்போது பாஜக அணிக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

இது தொடர்பான நமது கேள்விகளுக்கு பா.ஜ.க சார்பில் செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதில் பிரபல பத்திரிகைக்கு அளிக்கிறார். அதற்கு தி.மு.க அணி செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தியின் பதில்களளின் தொகுப்பை காணலாம்.


 மத்திய அரசை "ஒன்றிய அரசு"என குறிப்பிடுவதை எப்படி பார்க்கின்றீர்கள்? என்ன காரணமாக இருக்கும்?

நாராயணன் (பாஜக): ``புதிய ஆட்சி, புதிதாக வந்தவுடன், புதியதாக ஏதேனும் சொல்லவேண்டும் என்பதற்காக இதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றியம் என்றால் அதற்கு யூனியன் என்று பொருள் அவ்வளவுதான். இந்தியா என்பது 'யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்'என அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஆகவே யூனியன் கவர்மெண்ட் என்பதை ஒன்றிய அரசு என சொல்கிறார்கள். இதில், ஏதும் சொல் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால்... இதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருந்தால், ஸ்டாலின் வெற்றிபெற்ற மே 2-ம் தேதி, தன்னுடைய ட்விட்டர் கணக்கில் 'Belongs to the dravidian stock’ என்று தான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என பதிவேற்றிருந்தார். அதே போல, 1962-ம் ஆண்டு'I am dravidian stock’ என்று அண்ணாதுரை பாராளுமன்றத்தில் சொல்லும்போது, அதற்கு ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர், வாஜ்பாய் என்ன பதிலளித்தார் என்பதை திமுகவினர் பார்த்து, படித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ”

ராஜீவ்காந்தி (திமுக): ``முதன்முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தான் யூனியன் ஆப் இந்தியா என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதும் நீதிமன்ற தீர்ப்புகளில் கூட ஒன்றிய அரசு என்று தான் இருக்கிறது.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் போன்ற கட்சிகளும், மாநில அரசின் உரிமைகளில் தலையிட்டு ஒற்றையாட்சி தன்மையில் செயல்படவில்லை. ஒரு கூட்டாட்சி தத்துவத்தை கடைபிடித்தனர். ஆனால், இன்று இந்த மோடி தலைமையிலான பாஜக அரசு முழுக்க முழுக்க டெல்லியை மையப்படுத்தி சர்வாதிகாரபோக்குடன் செயல்படுகின்றனர். குறிப்பாக இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி விவசாய சட்டங்கள், ஜிஎஸ்டி வரிகள், கல்வித்துறை, மருத்துவத்துறை என மாநிலப்பட்டியலில் இருக்கும் துறைகளில் தலையிட்டு, தங்களின் அதிகாரத்தை வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். எனவே தான், நீங்கள் எங்களுக்கு எஜமானர்கள் அல்ல. உங்களுக்கு கீழ் நாங்கள் இல்லை. நீங்கள் ஒன்றிய அரசு மட்டும் தான். உங்களுக்கு நிகரான அதிகாரம் எங்களுக்கும் உண்டு. தமிழக அரசு தனித்து இயங்கக்கூடியது. எங்களுக்கு என்று தனி இறையாண்மை உள்ளது. என்பதை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. எனவே ‘ஒன்றிய அரசு’ குறிப்பிடுகிறோம். அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் நோக்குடன் செயல்படும்வரை இது அப்படித்தான் தொடரும்.

வாஜ்பாய் என்ன சொன்னார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தியாவில் இரண்டு இனங்கள் இருக்கிறது ஒன்று ஆரியம் ஒன்னொன்று திராவிடம். திராவிடன் என்பது அரசியல் அமைப்பு சட்டத்திலும் சரி, அறிவியல் பூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டது. தாங்கள் ஆரியர்கள் என்பதை அவர்களும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. நாங்களும் திராவிடர்கள் என்பதை விட்டுக்கொடுக்க மாட்டோம். மாநில உரிமை என்பது வேறு இன உரிமை என்பது வேறு. அவர்களின் சாதிய, வர்ணாஸ்ரம கோட்பாட்டின்படி மேலோர், கீழோர் என சொல்லப்படுவதை மறுத்து, எல்லோரும் சமம் என்ற சமூக நீதியை மேம்படுத்தவே திராவிடன் என்று கூறுகிறோம். ”

 இந்தியா பல மொழிபேசும் மாநிலங்களின் கூட்டமைப்பு எனும் அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் ஒன்றியம் என குறிப்பிடுவதாக தெரிவிக்கிறார்களே?

நாராயணன்: ``மத்திய அரசு, இந்திய அரசு, மாநில அரசு, தமிழக அரசு என்பதுதான் நடைமுறை. வேண்டுமானால் தமிழ்நாடு அரசை ஊராட்சி ஒன்றியங்களின் அரசு என்று வேண்டுமானால் மாற்றிக்கொள்ளட்டும். இது அவர்களின் போகாத ஊருக்கு வழிதேடும் செயல். இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டும். ”

ராஜீவ்காந்தி : ``இந்தியா ஒரு நாடு. தேசமல்ல. Country என்பதற்கும் Nation என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தியா பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒன்றியம். ”

 சமூக வலைதளங்களில் பாஜகவினர் 'ஒன்றிய அரசு’ என திமுக குறிப்பிடுவதை கடுமையாக எதிர்த்து வருகின்றனரே?

நாராயணன் : ``அது திமுகவினரின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டதால் பாஜக தொண்டர்கள் அப்படி பேசுகிறார்கள். இப்படி 'ஒன்றியம்’ என்ற சொல்லை பயன்படுத்தி, திமுகவினர் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால், அது அவர்களின் சிறுபிள்ளைத்தனம்!’’

ராஜீவ்காந்தி: ``எங்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். சரி, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உள்நோக்கம் இருக்கிறதா? உச்ச நீதிமன்றத்துக்கு உள்நோக்கம் இருக்கிறதா? நாங்கள் சட்டத்தில் உள்ளதை தான் பயன்படுத்துகிறோம். அவர்களுக்கு தான் உள்நோக்கம் இருக்கிறது. எங்கள் மொழிதான் பெரியது, நாங்கள் தான் எஜமானர்கள், மாநில அரசுகளின் எல்லா உரிமைகளையும் பறித்துக்கொள்ள வேண்டும், சனாதன தர்மத்தை கட்டமைக்க வேண்டும் என்பதுபோன்ற உள்நோக்கம் பாஜகவிற்கு தான் இருக்கிறது.’’

"மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை. மத்திய அரசுக்கென்று தனியாக வாக்காளர்கள் இல்லை” என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன் சொல்லியிருக்கிறாரே?

நாராயணன்: ``'இந்திய வாக்காளர் அடையாள அட்டை'என்று தான் அது. அதில் மாநிலம் என்றோ பஞ்சாயத்து என்றோ இல்லை. அதைத்தான் மாநில தேர்தல் முதல் வார்டு தேர்தல் வரை பயன்படுத்துகிறோம். "இந்தியா” தான் நம்முடைய அடையாளம்.``

ராஜீவ்காந்தி: ``ஒரு நிலப்பரப்புக்குள் வாழ்பவர்கள் தான் வாக்காளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் போன்ற தனி இறையாண்மை கொண்ட மாநில மக்களால் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உங்களுக்கு கவர்னன்ஸ் (ஆட்சி)மட்டும் தான் இருக்கிறது. எங்களுக்கு ஆட்சி மற்றும் மக்களும் இருக்கிறார்கள். எனவே அவர்களை விட எங்களுக்கு தான் கூடுதல் அதிகாரம் இருக்கிறது.”

ஒன்றியம் என்று சொல்வதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?

நாராயணன்: ``அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் சொல்கிறோம் என அவர்கள் சொல்வார்களேயானால், இந்திய அரசியலமைப்பு சட்டப்படியே இனி அனைத்து விஷயங்களிலும் அவர்கள் நடக்க வேண்டும். ஒன்றியம் என்று சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.”

ராஜீவ்காந்தி: ``அரசியல் சட்டத்தை மீறி யாரும் இயங்க முடியாது. பாஜக, திமுக என எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. திமுக அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு தான் இயங்குகிறது. அதனடிப்படையில் தான் ஒன்றியம் என்பதை பயன்படுத்துகிறது. முதலில் பாஜகவிடம் அரசியலமைப்பு சட்டத்தை இயங்கவிட சொல்லுங்கள். அரசியலமைப்பு மதசார்பற்ற முறையை சொல்கிறது, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அலுவல்மொழிக்க சொல்கிறது, கல்வியை மாநில உரிமை என்கிறது. ஆனால் பாஜக மதத்தை வைத்து ஆட்சி செய்கிறது, இந்தியை திணிக்கிறது, மாநில உரிமையை பறிக்கிறது. எனவே, பாஜக தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இயங்குகிறது.”

‘ஒன்றிய அரசு’ என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது, என பாஜக மாநில தலைவர், எல். முருகன் சொல்லியிருக்காரே?

நாராயணன்: ``எங்களுடைய மாநிலத்தலைவர் மிகத்தெளிவாக, இவர்களையும் இவர்களின் வார்த்தை பிரயோகத்தையும் இக்நோர் செய்திருக்கிறார். இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் அதற்கு பொருள்.”

 திமுக தவிர்த்து, ஊடகங்களும் ஒன்றிய அரசு என்றுதானே குறிப்பிடுகிறது.

நாராயணன்: ``எந்த ஊடகங்கள் இப்படி பயன்படுத்துகின்றனவோ, அவர்கள் இவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தான் பயன்படுத்துகிறார்கள் என பொருள்கொள்ள வேண்டும். ”

ராஜீவ்காந்தி: ``இறையாண்மை கொண்ட தமிழக அரசு பயன்படுத்துவதால், ஊடகங்களும் பயன்படுத்துகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ”

இறுதியாக தமிழ்நாடு அரசுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நாராயணன்: ``இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும். மத்திய அரசோடு ஒத்துழைத்து, மாநிலத்தின் பொருளாதார நிலையை சீர்தூக்கி சமன்செய்ய வேண்டும். இல்லையேல், தொடர்ந்து 50 வருடங்களாக மக்களை மொழி, இன ரீதியாக வேண்டுமென்றே திட்டமிட்டு, உணர்ச்சிவசப்படுத்திகொண்டிருக்கும் மலிவான அரசியலை மக்கள் உணர்ந்துகொள்வார்கள். ”

ராஜீவ்காந்தி: ``சிறுபிள்ளைத்தனம் என்ற வார்த்தையை மரியாதைக்குரிய நாராயணன் பயன்படுத்தக்கூடாது. அது அவர்களுக்கு தான் இருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என மாநில அரசின் எந்த தேவைகளையும் நிறைவேற்றாமல் பாராமுகத்துடன் உள்ள அவர்களுக்கு தான் சிறுபிள்ளைத்தனம் இருக்கிறது.

நாங்கள் அல்ல, அவர்கள் தான் பிரிவினைவதிகள். மதத்தின் பெயரால் குறிப்பிட்ட மக்களை இந்தநாட்டில் வாழக்கூடாது என்றும், சாதியின் பெயரால் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும், மொழியின் பெயரால் ஒரு மொழியை ஆட்சிமொழியாக்கி திணிக்கும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். எல்லைகளில் இல்லை பிரிவினை, சொந்த நாட்டுக்குள் தான் உள்ளது பிரிவினை. எல்லை பிரிக்கும் தத்துவம் திமுகவிற்கு இல்லை, ஆனால் உரிமைகள் வாங்கும் தத்துவம் எப்போதும் இருக்கிறது.”