அக்னிபத் திட்டம்: 40 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் 83 ஆட்சேர்ப்பு முகாம் அட்டவணையை முப்படை - அதிகாரிகள் வெளியிடு

20 June 2022


40 ஆயிரம் வீரர்கள் இந்த நிகழ்ச்சியின்போது, அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு விரிவான அட்டவணையை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி ராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பன்சி பொன்னப்பா, '40 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் 83 ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக வரைவு அறிக்கை திங்கட்கிழமை (இன்று) வெளியிடப்படும். அடுத்தடுத்த அறிவிப்புகள் ஜூலை 1 முதல் பல்வேறு ஆட்சேர்ப்பு பிரிவுகளால் வெளியிடப்படும்' என்று கூறினார்.

நாடு முழுவதும் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறும் எனக்கூறிய அவர், இதில் தேர்வு செய்யப்படும் 25 ஆயிரம் பேர் அடங்கிய முதல் குழுவினர் டிசம்பர் முதல் மற்றும் 2-வது வாரங்களில் பயிற்சியில் சேர்வார்கள் என தெரிவித்தார்.  இரண்டாவது பிரிவினர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயிற்சியில் சேர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கடற்படை, விமானப்படை கடற்படையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறும்போது, 'அக்னிபத் திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் 25-ந்தேதிக்கு முன் வெளியிடப்படும். தொடர்ந்து நடத்தப்படும் ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்களின் முதல் பிரிவினர் நவம்பர் 21-ந்தேதிக்கு முன் பயிற்சியில் சேர்வார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களும், பெண்களும் தேர்வு செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

விமானப்படையின் ஆட்சேர்ப்பு திட்டம் குறித்து ஏர் மார்ஷல் எஸ்.கே.ஷா விவரித்தார். அவர் கூறுகையில், 'விமானப்படையில் சேர்வதற்கான முன்பதிவு நடைமுறைகள் 24-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஆன்லைன் தேர்வுக்கான நடைமுறைகள் ஜூலை 24-ந்தேதி தொடங்கும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் முதல் குழுவினர் டிசம்பர் 30-ந்தேதிக்குள் பயிற்சியில் சேர்வதற்காக நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்' என்று தெரிவித்தார்.